சென்னை மாதவரத்தில் பள்ளி சிறுமியை கடத்த முயன்றவரை கைது செய்தது போலீஸ்
சென்னை மாதவரத்தில் பள்ளி சிறுமியை கடத்த முயன்றவரை கைது செய்தது போலீஸ்
சென்னை மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியில், ஐந்தாம் வகுப்பு படித்து வரும் சிறுமி வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தார்.அந்த வழியாக பைக்கில் வந்த நபர் சிறுமியிடம் தந்தை அழைப்பதாக கூறி அவரை பைக்கில் அமர வைத்து கொண்டு வேகமாக சென்றுள்ளார். தெரியாத வழியில் அவர் சென்றதால் சந்தேகமடைந்த சிறுமி பைக்கை நிறுத்தும்படி கூறி கூச்சலிட்டுள்ளார். இதனையடுத்து அவர் சிறுமியை வழியிலேயே இறக்கிவிட்டு விட்டு தப்பிச்சென்றதாக தெரிகிறது. வீட்டுக்கு திரும்பி வந்த சிறுமி நடந்தவற்றை பெற்றோரிடம் கூறியதையடுத்து அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.அப்பகுதியில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீசார் அந்த நபரை தேடி வந்தனர்.
இருசக்கர வாகனத்தின் எண்ணை வைத்து தேடிய போது அந்த வாகனம் மூலக்கடையில் நிற்கும் தகவல் கிடைக்க அங்கு போலீசார் விரைந்தனர். கடைக்கு வெளியே வாகனத்தை நிறுத்திவிட்டு சென்ற அந்த நபர் மீண்டும் வெளியே வந்த போது போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அந்த நபர் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முரளி என்பதும் இவர் ஆலந்தூர் குடிநீர் வழங்கல் வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் அங்கு திருட்டு வழக்கில் சிக்கிய அவர் வேலையை விட்டு நிறுத்தப்பட்டதால் சிறுமியை கடத்தி பணம் பறிக்க முயன்றது தெரியவந்தது. திருட்டு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் முரளி மீது உள்ளதாக தெரிவித்துள்ள போலீசார்
அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story