தமிழக மருத்துவமனைகளில் அவல நிலை... கவனம் செலுத்துமா அரசு...?
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருந்து பற்றாக்குறையோடு மருத்துவ உபகரணங்களுக்கும் பற்றாக்குறை உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருந்து பற்றாக்குறையோடு மருத்துவ உபகரணங்களுக்கும் பற்றாக்குறை உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது நன்னிலம் அரசு மருத்துவமனை. குளுக்கோஸ் ஸ்டான்ட் இல்லாததால் குளுக்கோஸ் பாட்டில்களும், ரத்த பாட்டில்களும் கொடிக்கம்பியில் தொங்க விடப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டத்தின் மிக முக்கியமான மருத்துவமனையின் நிலை தான் இது . ... இதுகுறித்து நோயாளிகள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்பது அவர்களின் மனக்குறை நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் நிலையோ சற்று வித்தியாசமானது... மருத்துவமனை வளாகத்தில் போதிய சுத்தம் இல்லை என்பது பெருங்குறையாக இருந்தாலும், குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டில் குளிர்சாதன இயந்திர இயங்கவில்லை என்பது வேதனைக்குரிய ஒன்று. ஜன்னல்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளதால், கொசுக்கடிக்கு ஆளாகின்றார்கள் குழந்தைகள்...
சேலம் அரசு மோகன் குராம மங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரம் முற்றிலுமாக இல்லை என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபனின் உதவியை நாடியுள்ளனர் மக்கள். மருத்துவமனையை ஆய்வு செய்த அவர், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும், மருத்துவமனைக்கு வரும் பார்வையாளர்களும் நோயாளியாகும் நிலை உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.
இது ஒருபுறம் இருக்க திண்டுக்கலில் உள்ள மாவட்ட மருத்துவக்கிடங்கின் நிலையோ மிக மோசம். மாவட்டம் முழுவதும் அனுப்பி வைக்க, சேமித்து வைக்கப்பட்டுள்ள மருந்து மாத்திரைகளும், மருத்துவ உபகரணங்களும், மழையில் நனைந்து வீணாகி வருகின்றன. உயிர்காக்கும் மருந்துகளுக்கு பாதுகாப்பு தேவை என்ற நிலை உருவாகியுள்ளது.
மலைபோல் தேங்கும் குப்பையால் தொற்று நோய்களின் பிறப்பிடமாக மணப்பாறை அரசு மருத்துவமனை மாறி வருகிறது என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாகும் மருத்துவமனையில் சேகரிக்கப்படும் குப்பைகள் உடனுக்குடன் அப்புறப் படுத்தப் படுவதில்லை என்பது புகார். இந்த குப்பையினால் ஏற்கனவே சிகிச்சை பெற வரும் நோயாளிகள் தொற்று நோய்க்கு ஆளாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு குப்பகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கை
Next Story