1800 ஆம் ஆண்டு கட்டப்பட்ட முத்தம்மாள் சத்திரம் : பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்கப்படுமா?
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு முத்தம்மாள் சத்திரம் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
தஞ்சாவூர் ஆட்சி செய்த மராட்டிய மன்னர்கள் பெரிய சிறிய சத்திரங்களை தஞ்சாவூர் முதல் தனுஷ்கோடி வரை அமைத்தனர். இதில் ஒரத்தநாட்டில் உள்ள முத்தம்மாள் சத்திரம், முத்தம்மாள் என்பவரின் நினைவாக 1800 ஆண்டு இரண்டாம் சரபோஜி மன்னரால் கட்டப்பட்டது. இதற்கு சான்றாக இங்கு பல மராட்டிய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அழகிய தோற்ற அமைப்பு உடைய யானை , குதிரை, பூட்டிய தேர் சக்கரம் வாயில் பகுதியும், தூண்கள் தாங்கி நிற்கும் பெரிய முற்றங்களும் , ஆங்காங்கே சிவலிங்கமும், மேல்தளத்தில் அழகிய வேலைப்பாட்டுடன் மரத்தால் அமைக்கப்பட்ட தூண்களும், இன்னமும் பழமை மாறாமல் உள்ளன.
ஒரு காலத்தில் சத்திரமாகவும், ஆங்கிலேயர் காலத்தில் வருகைக்குப் பின்னர் பள்ளிக் கூடமாகவும், செயல்பட்டு வந்த இந்த சத்திரம் தொல்லியல் துறையினரால், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகள் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறும் அதிகாரிகள், விரைவில் இது பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னமாக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றனர். அதே சமயம் முத்தம்மாள் சத்திரத்தில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள சிலைகளை தொல்லியல் துறையினர் சீரமைத்து பாதுகாக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Next Story