முன்னாள் ம​த்திய அமைச்சர் ப. சிதம்பரம் பற்றி அவரது பிறந்த ஊர் பேசுவது என்ன?

மொரார்ஜி தேசாய்க்கு அடுத்தபடியாக அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த முன்னாள் ம​த்திய அமைச்சர் ப.சிதம்பரம் பற்றி அவரது பிறந்த ஊர் பேசுவது என்ன? ஊர் சொல்லும் சேதி பகுதியில் இன்று சிதம்பரம்.
x
சிவகங்கை மாவட்டம், கண்டனூர் கிராமத்தில், 1945-ல் பிறந்தவர் ப.சிதம்பரம்.சென்னை மாநிலக் கல்லூரி மற்றும்  சென்னை சட்டக் கல்லூரியில் படித்த அவர் பின்னர் ஹார்வர்டு  பல்கலைக் கழகம் சென்று படித்தார்.

இளம் வயதிலேயே காங்கிரஸில் இணைந்துவிட்டாலும்,திராவிட இயக்கத்தின் தாக்கம் சிதம்பரத்திடம் உண்டு. அவருடைய திருமணத்தைத் தலைமை தாங்கி நடத்திவைத்தவர் பெரியார். இளம் வழக்கறிஞரான சிதம்பரம், அந்நாளின் புகழ்பெற்ற வழக்கறிஞர்களில் ஒருவரான பி.எஸ்.கைலாசத்திடம் பயிற்சி பெற்றார். கைலாசத்தின் மகள் நளினியே பின்னாளில் சிதம்பரத்தின் மனைவியானார்.

காமராஜர் - இந்திரா தலைமையில் காங்கிரஸ் இரு கூறுகளாகப் பிளவுபட்டுக் கிடந்த காலகட்டத்தில், இந்திரா தலைமையிலான அணியில் இணைந்தவர் சிதம்பரம்.

சிவகங்கை தொகுதியிலிருந்து ஏழு முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். முதல் முறையாக எம்பியான சில மாதங்களிலேயே  அமைச்சராகிவிட்டார் சிதம்பரம். மொரார்ஜி தேசாய்க்கு அடுத்தபடியாக, அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் சிதம்பரம்.

சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது மேற்கொண்ட மக்கள் நல நடவடிக்கைகளில் கல்விக் கடன் திட்டத்தை எளிமையாக்கியதும்.. பரவலாக்கியதும் முதன்மையானது.

அதேபோல, ஒரு குவிண்டால் கோதுமை 1,000 ரூபாய் , நெல் 600  ரூபாய் என்றிருந்த பாகுபாட்டை நீக்கி, இரண்டுக்கும் ஒரே கொள்முதல் விலை நிர்ணயித்தவர் சிதம்பரம். நாட்டிலேயே முதன்முறையாக 70,000 கோடி  ரூபாய் விவசாயக் கடனை மன்மோகன் சிங் அரசு தள்ளுபடி செய்ததிலும் சிதம்பரத்தின் பங்கு முக்கியமானது.

உலகமயமாக்கல் யுகத்துக்குள் இந்தியாவைக் கொண்டு சென்றதிலும், இந்திய வர்த்தகத் துறையை வளர்த்தெடுத்ததிலும் சிதம்பரத்துக்கு முக்கிய பங்கு உண்டு.

தமிழ் தலைவர்களில் பிரதமர் பதவி நோக்கி மிக அருகில்சென்றவர் சிதம்பரம்  என்பது குறிப்பிடதக்கது. ஆனால்  தற்போது ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சிதம்பரம்.


Next Story

மேலும் செய்திகள்