சாதனைகளை பொறுக்க முடியாமல் எதிர்க்கட்சி தலைவர் வெற்றுக்கூச்சல் : அமைச்சர் எம்.சி.சம்பத்
வெற்றிப்பாதையில் பயணிக்கும் தமிழக தொழிற்துறையின் சாதனைகளை பொறுக்க முடியாமல் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வெற்றுக்கூச்சல் இடுவதாக, அமைச்சர் எம்.சி.சம்பத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019 ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டினால் 22 நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதாகவும், 4 நிறுவனங்களின் வணிக உற்பத்தியும் துவங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படி, 2006 முதல் 2011 வரையிலான காலத்தில், திமுக ஆட்சியின் அந்நிய நேரடி முதலீடு 25 ஆயிரத்து 977 கோடி ரூபாய் மட்டுமே என குறிப்பிட்டுள்ளார். அதே சமயம் 2011 முதல் 2019 ஜுன் மாதம் வரை, அதிமுக ஆட்சியின் மொத்த அந்நிய நேரடி முதலீடு ஒன்று புள்ளி நான்கு ஏழு லட்சம் கோடி ரூபாய் என்றும், ஒவ்வொரு ஆண்டின் சராசரி வருவாய் 18 ஆயிரத்து 350 கோடி ரூபாய் என்றும் அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்துள்ளார். சென்டர் ஃபார் மானிட்டரிங் இந்தியன் எகானமி, எனும் நிறுவனத்தின் புள்ளி விவரங்கள் படி, கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தனியார் துறை முதலீடு ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 772 கோடி என அவர் விடுத்த அறிக்கையில் கூறியுள்ளார். இதனை, பொறுக்க முடியாத எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வெற்றுக்கூச்சல் இடுவதாகவும், அதிமுக அமைச்சர் எம்.சி.சம்பத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Next Story