"சிறுவயதிலேயே ராக்கெட் விட்டவர்" - இஸ்ரோ சிவன் கடந்து வந்த பாதை
உலகமே இன்று உச்சரிக்கும் பெயர் இஸ்ரோ தலைவர் சிவன். அந்த சிவனை பற்றி அவர் பிறந்த ஊர் பேசுவது என்ன? ஊர் சொல்லும் சேதி என்ற புதிய பகுதியில் அதுகுறித்து பார்ப்போம்..
கன்னியாகுமரி மாவட்டம், சரக்கல்விளை கிராமத்தில் பிறந்த சிவன், அங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தமிழ்வழி கல்வி முறையில் ஐந்தாம் வகுப்பு வரை பயின்றார். பின்னர் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை வல்லன்குமாரவிளை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். பள்ளி பருவத்திலேயே சிவன், நேர்மையானவராக, படிப்பில், குறிப்பாக கணிதத்தில் சிறந்து விளங்கியதுடன், வகுப்பில் முதல் மாணவராகவும் திகழ்ந்துள்ளார்.
பள்ளிப்பருவத்தில், வகுப்பு நேரத்திற்கு பிறகு, தந்தையின் மாங்காய் வியாபாரத்தில் உதவி பணிகளை சிவன் செய்து வந்துள்ளார். தந்தைக்கு சொற்ப வருமானமே இருந்ததால் சிவனும் அவரது சகோதரர்களும் பகுதி நேரமாக உழைத்த படியே படித்து வந்துள்ளனர்.
பள்ளிப்படிப்புக்கு பிறகு, சென்னையில் உள்ள எம்.ஐ டி.யில் ஏரோநாட்டிகல் இளங்கலை பொறியியல் பட்டப்படிப்பும், பெங்களுரில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தில் முதுநிலை அறிவியல் பட்டமும் பெற்ற சிவன், 1982ஆம் ஆண்டு, இஸ்ரோவில் முதன்முதலாக பணியில் சேர்ந்தார். அப்போது பி.எஸ்.எல்.வி ராக்கெட் வடிவமைப்பு குழுவில் முக்கிய பங்காற்றிய சிவன், சிறுவயதிலேயே ராக்கெட் விடுவதில் தீவிர ஆர்வம் கொண்டிருந்ததாக அவரது பள்ளிக்கால நண்பர்கள் கூறுகின்றனர்.
பின்னர் பல கட்டங்களாக இஸ்ரோவின் தலைவராக உயர்ந்த சிவன், இஸ்ரோவில் ஒவ்வொரு திட்டம் தொடங்குவதற்கு முன்பாக, தனது சொந்த ஊரில் உள்ள அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்துவதை வழக்கமாக கொண்டிருப்பதாக உறவினர்கள் கூறுகின்றனர்.
இஸ்ரோவின் தலைவராக உயர்ந்த பின்பும் ஊருக்கு செல்லும் போதெல்லாம் எளிமை மாறாமல், உற்றார், உறவினர்களோடு நட்பு பாராட்டும் சிவன், தன் ஊரையும் தான் பயின்ற பள்ளியையும் எப்போதும் மறக்காதவர் என்றும் படித்த பள்ளியின் மீது அவருக்கு தனி பிரியம் என்றும் சரக்கல்விளை கிராம மக்கள் கூறுகின்றனர்.
தான் படித்த பள்ளி கட்டடம் பழுதடைந்து காணப்படுவதை உணர்ந்த சிவன், இஸ்ரோ நிறுவனத்தின் மூலம் பல இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, கட்டடங்களையும் ஸ்மார்ட் வகுப்பறைகளையும் கட்டிக்கொடுத்துள்ளதாக கூறுகின்றனர் அப் பள்ளி நிர்வாகிகள்.
விடாமுயற்சியாலும், உழைப்பாலும் புகழின் உச்சிக்கு சிவன் சென்றாலும், அவரின் எளிமையும், கடந்த காலத்தையும், சொந்த கிராமத்தையும் மறக்காத அணுகுமுறையே அவரது அடையாளமாக பார்க்கப்படுகிறது. சாதாரண குடும்பத்தில் பிறந்து, கிராம பள்ளியில் படித்து விண்வெளி துறையில், உலக அரங்கில் இந்தியாவை கவனிக்க வைத்த சிவனின் ஒவ்வொரு வெற்றியும், அவருக்கும் அவரின் கிராமத்திற்கும் மட்டுமல்ல, இந்திய தேசத்திற்கே பெருமை மிகு மைல்கற்கள் என்றே சொல்ல வேண்டும்.
Next Story