நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாக கொண்டாட்டம்
விநாயகர் சதுர்த்தி இன்று செப்டம்பர் 2, நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
விநாயகர் சதுர்த்தி 2019 : பிள்ளையார்பட்டியில் சிறப்பு அலங்காரத்தில் கற்பக விநாயகர்
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி வழிபாடு செய்து வருகின்றனர். அதிகாலை முதலே கற்பக விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கற்பக விநாயகரை தரிசனம் செய்தார்.
உச்சி பிள்ளையாருக்கு சந்தன காப்பு அலங்காரம் - கருவறை வாயிலுக்கு பழத் தோரணம்
சதுர்த்தி விழாவையொட்டி, திருச்சி மலைக்கோட்டை உச்சிபிள்ளையாருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. அதிகாலை முதலே கோயிலில் திரண்ட பக்தர்கள், வரிசையில் காத்திருந்து உச்சி பிள்ளையாரை தரிசனம் செய்தனர்.
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்: 12 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி
சென்னையை அடுத்த சிட்லபாக்கத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 12 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் நடைபெற்று வரும் கண்காட்சி பொதுமக்களை ஈர்த்து வருகிறது. சென்னையை அடுத்த குரோம்பேட்டையைச் சேர்ந்த கட்டிட கலை நிபுணரான சீனிவாசன், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலை கண்காட்சியை நடத்தி வருகிறார். 13 வது ஆண்டாக தற்போது தொடங்கியுள்ள கண்காட்சியில், 12 ஆயிரம் விநாயகர் சிலைகள் இடம்பெற்றுள்ளன. சிட்லபாக்கத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் கண்காட்சியில், ஏழு அடி உயரத்தில் அத்தி மரத்தில் செய்யப்பட்ட அத்திவரத விநாயகர், ஸ்கூட்டர் ஓட்டும் விநாயகர் என பல்வேறு வடிவங்களில் 200க்கு மேற்பட்ட சிலைகள் இடம் பெற்றுள்ளன. வெளிநாடுகளில் உள்ள விநாயகர் கோவில்களின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ள இந்த கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.
குழந்தைகளை கவரும் விநாயகர் கண்காட்சி
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமாக, சேலத்தில் குழந்தைகளைக் கவரும் விநாயகர் கண்காட்சி தொடங்கியுள்ளது. 35 வது ஆண்டாக தொடங்கியுள்ள கண்காட்சியில், இந்த ஆண்டு பல லட்ச ரூபாய் மதிப்பில் மின்னணு ஒளியமைப்பில் ஜொலிக்கும் விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. விநாயகர் அவதாரத்தை விளக்கும் காட்சிகளை தத்துரூபமாக வடிவமைத்துள்ளதுடன், இந்தியா மின்னணு முன்னேற்றத்தில் வளர்வதை குறிக்கும் விதமாக முழுவதும் டிஜிட்டல் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறினர்.
மணக்குள விநாயகருக்கு தங்க கவச அலங்காரம்
சதுர்த்தி விழாவையொட்டி புகழ் பெற்ற புதுச்சேரி மணக்குள விநாயகர் மற்றும் உற்சவருக்கு தங்க கவசம் அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. சிரமமின்றி பக்தர்கள் விநாயகரை தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தங்க கவச அலங்காரத்தில் மும்பை சித்தி விநாயகர்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மும்பை சித்தி விநாயகர் கோயிலில் தங்க கவச அலங்காரத்தில் பிள்ளையார் காட்சி தருகிறார். கண்ணை கவரும் விதமாக ஜொலிக்கும் பிள்ளையார் சிலை முன்பு, பூ, பழம், அருகம்புல் வைத்து பூஜைகள் நடைபெற்று வருகிறது. தலைப்பாகை கிரீடத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பிள்ளையாரை பக்தர்கள் ஏராளமானோர் பக்தி பரவசத்துடன் வழிபட்டு வருகின்றனர்.
Next Story