துறைமுகத்தில் டன் கணக்கில் குவியும் 2ஆம் தர மீன்கள் : 5% ஜிஎஸ்டியால் வாங்க ஆர்வம் காட்டாத அரவை ஆலைகள்
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் குவியும் 2ஆம் தர மீன்களை, 5 சதவீத ஜிஎஸ்டியால் அரவை ஆலைகள் வாங்க ஆர்வம் காட்டவில்லை என்றும், இதனால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர்களை சார்ந்த 1000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இங்கு மீனவர்கள் அதிக அளவில் ஏற்றுமதி ரகமான முதல் தர கணவாய் மீன்கள் மற்றும் அரவை ஆலைகளுக்கு அனுப்பப்படும் இரண்டாம் ரக கழிவு மீன்களை பிடித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக கணவாய் மீன்கள் வரத்து குறைந்ததால், அதிக அளவு இரண்டாம் ரக மீன்களை பிடித்து வந்தனர். இந்நிலையில் இரண்டாம் ரக மீன்களை வாங்கி மீன் எண்ணை மற்றும் கோழித் தீவனங்களாக மாற்றும் அரவை ஆலைகளுக்கு, அரசு 5 சதவீத ஜி.எஸ்.டி வரி விதித்துள்ளது. இதனால் ஆலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் இந்த இரண்டாம் தர மீன்களை வாங்க ஆலைகள் முன் வரவில்லை. இதனால் துறைமுக வளாகத்தில் இரண்டாம் தர மீன்கள் மலைபோல் குவிக்கப்பட்டு வருகின்றன. விற்பனை ஆகாமல் மீன்கள் அழுகி வருவதால் 6 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே வரி விதிப்பை குறைத்து, மீனவர்களின் இழப்பை சரி செய்ய முன் வர வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story