லஞ்ச ஒழிப்பு ஐ.ஜி.யாக இருந்த முருகன் மீது குற்றச்சாட்டு - வழக்கு விசாரணையை தெலங்கானாவுக்கு மாற்றி உத்தரவு
லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி.யாக இருந்த முருகன் மீது பெண் எஸ்.பி அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணையை தெலங்கானாவிற்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் பெண் எஸ்.பி. ஒருவர் லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜியாக இருந்த முருகன் மீது பாலியல் புகார் அளித்தார். இது தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் புகார் குறித்து 2 வாரத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக ஐ.ஜி. முருகன் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றுவது குறித்து கருத்து தெரிவித்தது.வழக்கை கேரளாவுக்கு மாற்றலாம் என்று பெண் எஸ்.பி. தரப்பில் கூறப்பட்டதற்கு தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில்தான் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம் விசாரணையை தெலங்கானாவிற்கு மாற்றி 6 மாதத்தில் அறிக்கை தர அம்மாநில போலீசாருக்கு உத்தரவிட்டது.
தெலங்கானா தலைமை செயலாளர், அம்மாநில டிஜிபி-க்கு வழக்கு தொடர்பான ஆவணங்களை அனுப்பி, மூத்த பெண் அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு வேறு மாநிலத்திற்கு மாற்றுவதால் தமிழக காவல்துறை மீது நம்பிக்கை இல்லையென அர்த்தம் ஆகாது என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Next Story