சுங்குடி சேலைக்கு அதிகரித்த மவுசு - தீபாவளியை முன்னிட்டு உற்பத்தி தீவிரம்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உலகப் புகழ்பெற்ற சுங்குடி ரகம் உள்ளிட்ட சேலை உற்பத்தி தீவிரமாகியுள்ளது.
பல்வேறு தொழில்களுக்கும், சந்தைக்கும் உலகப் புகழ்பெற்று விளங்கும் தமிழகம், ஆடைத் தயாரிப்பிலும் தனி முத்திரை பதித்துள்ளது. இதில் ஒன்றாக, பல்வேறு புகழையும், இயற்கை அழகையும் தனக்குள் வைத்துள்ள தேனி மாவட்டத்தில் சக்கம்பட்டி, டி. சுப்புலாபுரம் சேலைகளின் மவுசு சிங்கப்பூர், மலேசியா வரை பரவிக் கிடப்பது. தீபாவளியை முன்னிட்டு, கிராக்கி அதிகரித்திருப்பதால், அங்கு சேலைகள் ரகம்ரகமாக உற்பத்தியாகி வருகிறது. முழுக்க முழுக்க பருத்தியில் நெய்யப்படும் சுங்குடி சேலை முதல், காத்தாடிபுட்டா, மெர்சரைஸ், பேன்சிகட்டம், ஜோதிகா, கும்கி, கபாலி என திரைவரிசை சேலைகள், ஜரிகை காட்டன், செட்டிநாடு பிளைன் என 15-க்கும் மேற்பட்ட ரகங்களில், பல்வேறு நிறங்களில் தறியேற்றப்பட்டு தயாரிக்கப்படுகிறது. இசை வாத்தியங்கள், அன்னப்பறவை, மான், மயில், ராஜாராணியின் பல்லக்கு பவனி, வீறுகொண்ட குதிரை வீரன் என பல்வேறு படங்கள் சேலைகளில் உருவாகின்றன. கண்களை கவரும் பல்வேறு வண்ணங்களில், இரவுபகல் பாராமல் சுமார் 2000ம் விசைத் தறிகள் மூலம் நாளொன்றுக்கு 8000ம் சேலைகள் உற்பத்தி ஆகிறது. வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பருத்தி சேலைக்கான ஜி.எஸ்.டி வரி, மனம் வெதும்பும் வகையில் உள்ளதாக கூறும் நெசவாளர்கள், வரி குறைப்புச் செய்துதர கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story