ஒரு ரூபாய் டியூசன்... 16 ஆண்டுகளாக ஓயாத ஆசிரியை... தெருவிளக்கே வெளிச்சம்...
ஒடுங்கிய தெருவுக்குள், ஏழை மாணவர்களுக்கு சிறகை விரித்து உலகம் சுற்ற கற்றுத் தருகிறார் ஒரு ஆசிரியை.
திருச்சி மாவட்டம் அரியமங்கலம் நேரு நகரைச் சேர்ந்த கோமதி என்பவர், ஈவெரா கல்லூரியின் கணக்காளர். 12ஆம் வகுப்புக்கு மேல் படிக்க குடும்பச் சூழல் அனுமதிக்காத நிலையில், ஆசிரியர்களின் உதவியும், ஊக்குவிப்பும் இவரை எம்.பில்.வரை உயர்த்தியுள்ளது. இதை மனதில் வைத்துக்கொண்ட கோமதி, தம்மைப் போல் சிரமப் படுவோரை கைதூக்கிவிட எதார்த்தமாக தொடங்கியதுதான் இந்த தனிப்பயிற்சி நிலையம். ஆனால், தெரு வாகனங்களை நிறுத்தி, காலணிகளை கழற்றிவிடும் ஒடுங்கிய பாதை, கடைக்கோடி மாணவர்களின் திறந்த வெளி கல்விச் சாலையாக உள்ளது. ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு இதுதான் போதி மரம். நண்டும் சிண்டுமாக, கலைந்த தலையோடு, கவனிப்பாரற்று என ஏழை வர்க்கத்தின் எல்லா வகையான மாணவர்களும் இங்கு சங்கமம்.
மங்களாக தெரியும் தெருவிளக்கின் வெளிச்சத்தில், அறிவு வெளிச்சம் பாய்ச்சும் இவரது திறந்தவெளி பாடசாலையில் மாணவர்களின் எண்ணிக்கை 80ஐ தாண்டுகிறது. கோடிகளை நிரப்பும் கார்ப்பரேட் கல்வி நிறுவன மாணவர்களுக்கு சவால் விடுக்கின்றனர் வீதியில் படிக்கும் இவர்களது திறமை. இலவசமாக பெற்றால், எதுவும் நிலைக்காது என்பதால், மாணவர்களே தரும் ஒரு ரூபாயில், தான் ஆசைப்பட்ட ஆசிரியர் கனவை பூர்த்தி செய்துகொள்கிறார் கோமதி டீச்சர். 16 ஆண்டுகால கல்விச் சேவையில், தனிப் பயிற்சி நிலையத்தை அலங்கரித்த மாணவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரம். மாலை 5 மணிக்கு தொடங்கும் தனிப்பயிற்சி நிலையம், மழை வந்தால் மட்டும் ஒதுங்க இடம் கேட்டு, ஏங்கி கிடக்கிறது...
Next Story