"ஆந்திராவில் இருந்து 8 டிஎம்சி தண்ணீர் வழங்க உறுதி" - சென்னை மெட்ரோ குடிநீர் வாரிய முதன்மை பொறியாளர் தகவல்
ஆந்திராவில் இருந்து 8 டிஎம்சி தண்ணீர் வழங்க அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாக சென்னை மெட்ரோ குடிநீர் வாரிய முதன்மை பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
திருப்பதியில் உள்ள தெலுங்கு கங்கை குடிநீர் வாரிய முதன்மை பொறியாளர் அலுவலகத்தில் தமிழக அரசின் சார்பில் சென்னை மெட்ரோ கார்ப்பரேஷன் முதன்மை பொறியாளர் ராஜேந்திரன் தலைமையில் தமிழக அதிகாரிகள் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திரன், ஆந்திர தமிழக குடிநீர் ஒப்பந்தத்தின்படி ஆந்திர அரசு ஒவ்வொரு ஆண்டும் 12 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டி உள்ளது. அதில் ஜூன் முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி தண்ணீரை வழங்க கோரிக்கை விடுத்துள்ளதாக கூறினார். தங்களின் கோரிக்கையை ஏற்று தண்ணீரை வழங்க ஆந்திர அதிகாரிகள் உறுதி அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதேநேரம் ஆந்திராவில் போதிய மழை இல்லாத நிலையில் கண்டலேறு மற்றும் சோமசீலா அணைகள் வறண்டு காணப்படுவதாகவும், கண்டலேறு அணையில் தண்ணீர் கொண்டு வந்த பிறகு சென்னைக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கான வாய்ப்பு உள்ளதாக ஆந்திர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story