போலீஸிடம் சிக்கிய 78 வயது பலே திருடன்
சென்னையில் அரசு மருத்துவமனைக்கு வரும் மூதாட்டிகளை குறிவைத்து கொள்ளையடித்து வந்த 78 வயதான பலே கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு தனியாக வரும் வயதான மூதாட்டிகளின் கவனத்தை திசை திருப்பி நகைகள் தொடர்ந்து கொள்ளையடிக்கபட்டு வருவதாக புகார்கள் வந்தது. மூதாட்டிகளிடம் வங்கியில் லோன் வாங்கி தருவதாகவும், முதியோர் உதவி வாங்கி தருவதாகவும் கூறி அவர்களிடம் இருந்து நூதனமாக நகைகளை முதியவர் ஒருவர் பறித்துச் சென்றதாக வந்த புகார்களின் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து அரசு மருத்துவமனைகளில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் கோவில்பட்டியை சேர்ந்த 78 வயதான புஷ்பராஜ் என்பது தெரியவந்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். முதல் மனைவியை பிரிந்து சென்னை வந்த புஷ்பராஜ், சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்கனவே திருமணம் ஆன இஸ்லாமிய பெண்ணை இரண்டவதாக திருமணம் செய்து தன்னுடைய பெயரை அமீர்பாஷா என மாற்றிக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சிறு சிறு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு சிறைக்கு சென்று வந்த புஷ்பராஜ், கடந்த 6 ஆண்டுகளாக போலீசாரிடம் சிக்காமல் மூதாட்டிகளை குறிவைத்து கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
சென்னையில் உள்ள ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளில் 10 நாட்கள் வீதம் கொள்ளையடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். மருத்துவமனைக்கு தனியாக வரும் மூதாட்டிகளை குறிவைத்து அவர்களிடம் பேச்சு கொடுத்து நகைகளை நூதனமாக கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை பின்தொடர்ந்த போலீசார், பெருங்களத்தூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் பாலியல் பிரச்சினைக்காக இவர் சிகிச்சை பெறுவதை உறுதி செய்தனர். இதையடுத்து மருந்து தருவதாக மருத்துவர் மூலமாக கூறவைத்து அவரை அங்கு வரவழைத்தனர். மருத்துவமனைக்கு புஷ்பராஜ் வந்த போது அங்கு மறைந்திருந்த போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.
புஷ்பராஜ் மீது ஏற்கனவே 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள நிலையில் அசராமல் இந்த வயதிலும் தொடர்ந்து நூதன கொள்ளையில் ஈடுபட்டு வந்தது போலீசாரையே ஆச்சரியப்பட வைத்துள்ளது. கைது செய்யப்பட்டவரிடம் இருந்து சுமார் 50 சவரன் நகைகளை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story