"சகோதரனை தவறாக பேசியதால் கொன்றேன்" - பிடிபட்ட மாணவன் அதிர்ச்சி வாக்குமூலம்
கொடைக்கானலில் தனியார் பள்ளி விடுதியில் 10 ஆம் வகுப்பு மாணவன் சக மாணவனால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொடைக்கானல் பசுமை பள்ளத்தாக்கு அருகே, இயங்கி வரும் தனியார் பள்ளியின், விடுதியில் தங்கி பல மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும் படித்து வருகின்றனர்.இந்த நிலையில், நேற்றிரவு பத்தாம் வகுப்பு படித்துவந்த விருதுநகரைச் சேர்ந்த மாணவருக்கும், ஓசூரை சேர்ந்த கபில் ராகவேந்திரா என்ற மாணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இந்த தகராறு ஒரு கட்டத்தில் கைக் கலப்பாக மாறியதில், விருதுநகரைச் சேர்ந்த மாணவன் ஸ்டம்ப் மற்றும் கத்தரிக்கோலால் கபில் ராகவேந்திராவை தாக்கியுள்ளான்.இதில் படுகாயமடைந்த கபில் ராகவேந்திராவை விடுதியின் சக மாணவர்களும், ஆசிரியர்களும் உடனடியாக கொடைக்கானல் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.ஆனால், கபில் ராகவேந்திரா ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறவே, உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.மாணவன் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிய போலீசார், விருதுநகர் மாணவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில், தகவலறிந்து வந்த கபில் ராகவேந்திராவின் பெற்றோர் கதறி அழுதது பெரும் சோகம். பள்ளி வளாகத்தில் ஏற்பட்ட தகராறில் ஒரு மாணவன், சகமாணவனால் கொல்லப்பட்ட சம்பவம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
சகோதரனை தவறாக பேசியதால் கொன்றேன் :
இதனிடையே , தனது சகோதரனை தவறாக பேசியதால், கபில் ராகவேந்திராவை கொலை செய்ததாக மாணவன் ஸ்ரீஹரிஸ் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது .ஸ்ரீஹரிஸ் அளித்துள்ள வாக்குமூலம் சக மாணவர்களின் பெற்றோரை அதிர வைத்துள்ளது.
Next Story