சென்னையில் இரவில் தொடரும் கனமழை - பல்வேறு இடங்களில் சாலையோரத்தில் தண்ணீர் தேங்கியது
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
வெப்பச்சலனம் மற்றும் தென் மேற்கு பருவமழை தாக்கம் காரணமாக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. சென்னையில் இரவு நேரங்களில் தொடர்ந்து 3 வது நாளாக பலத்த காற்று இடி மின்னலுடன் மழை கொட்டி தீர்த்து வருகிறது. தியாகராய நகர், வடபழனி, மீனம்பாக்கம், கிண்டி, சைதாப்பேட்டை, ஆலந்தூர், பல்லாவரம், கோயம்பேடு, நுங்கம்பாக்கம், எழும்பூர் , திருவல்லிக்கேணி, வியாசர்பாடி, அயனாவரம், என நகரின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.
திருவண்ணாமலையில் இடியுடன் கனமழை :
திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த இடியுடன் கனமழை பெய்தது. இரவில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த கனமழையால், நகரில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருவது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டத்திலும், இடி மின்னலுடன் பரவலாக மழை :
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கன மழை நீடித்தது.நாமக்கல், சேந்தமங்கலம், காளப்பனாயகன்பட்டி, உள்ளிட்ட இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் சில இடங்களில் கனமழையும், பல இடங்களில் மிதமான மழையும் பெய்தது.
மணப்பாறையில் பலத்த காற்றுடன் கனமழை :
இதேபோல, திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மாலை நேரத்தில், பலத்த காற்றுடன் மழை பெய்தது.இதனால் சாலையில் ஆங்காங்கே தேங்கி நின்ற மழை நீரால், மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். மழை நின்றதும் வானில் வர்ண ஜாலம் போல் தோன்றிய வானவில்லை பலரும் கண்டு ரசித்தனர்.
விருதுநகரை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு மணி நேரம் நீடித்த மழை :
விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஆர்.ஆர். நகர், பட்டம் புதூர் சூலக்கரை, மல்லாங்கிணறு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால், வெப்பம் தணிந்து, குளிர்ச்சி நிலவியது. இந்த மழையால், அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை :
இதேபோல, கிருஷ்ணகிரி, சூளகிரி, வேப்பனஹள்ளி, காவேரிபட்டினம், பர்கூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை கனமழை பெய்தது. முதலில் சாரல் மழையாக தொடங்கி, பின்னர் கனமழை பெய்ததால், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
நாகை மாவட்டத்திலும் பல இடங்களில் பரவலாக மழை :
நாகை மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில், மங்கைநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரமாக, பரவலாக மழை பெய்தது. இந்த மழையால், மயிலாடுதுறையில், கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்த வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
Next Story