'வெடிகுண்டு முருகேசன்' நகைச்சுவை பாணியில் தொடர் மோசடி

பிரியாணியில் பல்லி விழுந்து இருந்ததாக கூறி, ஹோட்டல் உரிமையாளர்களிடம், பணம் பறித்து வந்த ஏமாற்று பேர்வழியை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர்.
வெடிகுண்டு முருகேசன் நகைச்சுவை பாணியில் தொடர் மோசடி
x
வடிவேலுவின் வெடிகுண்டு முருகேசன் படத்தில் வரும் காமெடி போல் நிஜத்தில் நடந்திருக்கிறது. ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் குந்தக்கல் ரயில் நிலையத்தில்  உள்ள கடையில் மும்பையை சேர்ந்த சுந்தர்பால் என்பவர், வெஜிடபிள் பிரியாணி  வாங்கி சென்றுள்ளார். 

பின்னர் சிறிது நேரத்தில் திரும்பி அவர்,  கடையில் இருந்தவர்களிடம்,  பிரியாணியில் பல்லி இருந்ததாகவும் அதனை சாப்பிட்டதால் தனக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து கடையின் உரிமையாளர்,  உணவில் பல்லி இருந்தது குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டாம் என்றுகூறி சுந்தர்பாலுக்கு 5 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தை அறிந்த ரயில்வே போலீசார், உடனடியாக  சுந்தர்பாலை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றுள்ளனர். 

அப்போது, அங்கிருந்த ரயில்வே ஊழியர் ஒருவர், இதே போன்ற சம்பவம் மத்திய பிரதேசத்தில் ஜபல்பூர் ரயில் நிலையத்திலும் நடந்ததாக கூறி  ஒரு வீடியோவை  ரயில்வே போலீசாரிடம் காட்டியுள்ளார். அந்த வீடியோவில்,  ஜபல்பூர் ரயில் நிலையத்தில் சமோசாவில்  பல்லி இருந்ததாக கூறி பணம் பறித்த ஒருவரை போலீசார் கைது செய்ததை பார்த்த ரயில்வே போலீசார், அந்த வீடியோவில் இருந்தவரும் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட  சுந்தர்பாலும் ஒருவரே என்று கண்டறிந்தனர்.

இதனை தொடர்ந்து சுந்தபாலிடம் தீவிர விசாரணை நடத்திய போலீசார், நாடு முழுவதும் பல்வேறு ரயில் நிலையங்களில் உள்ள ஹோட்டல்களில், அவர் இதேபோல் மோசடியில் ஈடுபட்டு பணம் பறித்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், வேறு எங்கெங்கு இதே போல மோசடியில் ஈடுபட்டு சுந்தர்பால் பணம் பறித்துள்ளார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஓட்டல்களில் பணம் இல்லாமல் சாப்பிட்டுவிட்டு ஏமாற்றுபவர்கள் ஒரு ரகம் என்றால்,  சுந்தர்பால் போல ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். 

Next Story

மேலும் செய்திகள்