மாணவர் சேர்க்கை - யார் சொல்வது உண்மை?
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து அமைச்சரும், கல்வித்துறையும் வெவ்வேறு தகவல்களை அளித்திருப்பது, குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
நடப்பாண்டில், 1 லட்சத்து 65 ஆயிரம் மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாகவும், அடுத்த ஆண்டு 5 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்வார்கள் எனவும், அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். ஆனால் இதற்கு மாறாக 4 லட்சத்து 47 ஆயிரம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது. கடந்த 23ம் தேதி நிலவரப்படி, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகளில் 33 ஆயிரத்து 975 மாணவர்களும், மேல்நிலைப் பள்ளிகளில் 24 ஆயிரத்து 570 மாணவர்களும் சேர்ந்திருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், முதல் வகுப்பில் 3 லட்சத்து 88 ஆயிரத்து 629 மாணவர்கள் சேர்ந்திருப்பதாகவும், புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆரம்ப பள்ளிகளில் மட்டும், 2 லட்சத்து 81 ஆயிரத்து 193 மாணவர்களும், நடுநிலைப்பள்ளிகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 436 மாணவர்களும் சேர்ந்துள்ளனர். இதன்மூலம், ஒட்டுமொத்தமாக, 4 லட்சத்து, 47 ஆயிரத்து, 174 மாணவர்கள் சேர்ந்திருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 65 ஆயிரத்து 888 மாணவர்கள் புதிதாக சேர்ந்திருப்பதாகவும் மற்றொரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இவ்வாறு, மாணவர்கள் சேர்க்கை விவகாரத்தில், வெளியாகும் தகவல்கள், பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story