ஏ.டி.எம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி கொள்ளை ... ஆடி காரில் வலம் வந்த கொள்ளை கும்பல்

ஏ.டி.எம். இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி பெரும்பணத்தை கொள்ளையடித்த கும்பல், போலீசாருக்கு சந்தேகம் ஏற்படாதவாறு ஆடி காரில் வலம் வந்த‌து தெரிய வந்துள்ளது.
ஏ.டி.எம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி கொள்ளை ... ஆடி காரில் வலம் வந்த கொள்ளை கும்பல்
x
ஏ.டி.எம் இயந்திரத்தில் நமது  கார்டை செலுத்தும் இடத்தில், இந்த ஸ்கிம்மர் கருவி பொறுத்தப்படுகிறது. இதன் மூலம் நாம் கார்டை செலுத்தும் போது, நமது ஏ.டி.எம். கார்டின் தகவல்களை திருடி, எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும், நம்முடைய அனுமதி இல்லாமலே பணத்தை திருட முடியும். அப்படி தான், கடந்த 16ம் தேதி அயனாவரத்தில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த கொள்ளையர்களை பிடிக்க, போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். அவர்கள் எடுத்த பல்வேறு முயற்சிகளுக்கு பலன் கிடைத்தது.

முதலில், வங்கி கணக்கில் இருந்து திடீரென பணம் பறிபோனதாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு வந்த புகார்களை வைத்து விசாரணையை தொடங்கினர். புகார் கொடுத்த நபர்களின் ஏ.டி.எம் கார்டுகள் கடைசியாக எந்த ஏ.டி.எம். இயந்திரங்களில் பயன்படுத்தப்பட்ட‌து என்பதை ஆய்வு செய்த போலீசார், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தபோது, சம்மந்தப்பட்ட அனைத்து ஏ.டி.எம் இயந்திரங்களுக்கும், ஆடி கார் ஒன்று வந்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அதன்படி, அந்த ஆடி கார் சென்ற இடங்களை, அங்கிருந்து சிசிடிவி கேமராக்கள் மூலம், ஆய்வு செய்த போலீசார், அந்த கார் திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை வரை சென்றதை கண்டுபிடித்தனர். அந்த ஆடி காரின் எண்ணை வைத்து, அதில் வந்த நபர் பெயர் இர்ஃபான் என்பதை கண்டுபிடித்து அவனை கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில், இதே இர்பான் தான், புதுச்சேரியில் ஸ்கிம்மர் கொள்ளையனாக வலம் வந்தவர் என்பதும், அங்கு கைதாகி சிறையில் இருந்த அவன், நிபந்தனை ஜாமினில் வெளிவந்து தனது சகாக்களுடன் கைவரிசை காட்டியுள்ளதும் தெரிய வந்தது. இர்பானின் வங்கி பரிவர்த்தனைகளை ஆய்வு செய்ததில், அல்லா பகாஷ், அப்துல் ஹாடி ஆகிய கூட்டாளிகள் சிக்கியுள்ளனர். சிறுவயது முதலே நண்பர்களான இந்த மூன்று பேரும், ஆடி காரில் வந்து ஸ்கிம்மர் கருவியை பொருத்தினால் போலீசாரின் சந்தேகப் பிடியில் இருந்து தப்பி விடலாம் என தப்பு கணக்கு போட்டுள்ளது. இந்த கூட்டத்தின் தலைவனான இர்பானுக்கு, வெளிநாடுகளை சேர்ந்த ஸ்கிம்மர் கொள்ளை கும்பல்களுடன் தொடர்பு இருந்துள்ளது. அந்த பழக்கத்தின் மூலம், இவர்களுக்கு ஸ்கிம்மர் கருவி எளிதாகவே கிடைத்துள்ளது. ஸ்கிம்மர் கருவி மூலம் கொள்ளையடித்து கொடுத்தால், 30 சதவீத பணத்தை கூட்டாளிகளுக்கு கொடுப்பானாம் இர்பான்...

இந்த கொள்ளை மூலம் இவர்கள் வாங்கி குவித்த சொத்துக்கள் ஏராளம்... குறிப்பாக, இர்பான், சொகுசு கார்கள் உள்பட பல சொத்துகளை வாங்கியுள்ளான். கூட்டாளி அல்லா பகாஷ், தான் நடத்தி வரும் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய, அப்துல் ஹாடியோ, கொள்ளையடித்த பணத்தில் வெளிநாட்டில் டிராவல்ஸ் ஒன்றை நடத்தி வந்துள்ளதும் விசாரணையின்போது, போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இவர்களின் அதிரவைக்கும் பின்னணியை வாக்குமூலமாக பதிவு செய்துகொண்ட போலீசார், கைது செய்யப்பட்ட இந்த மூவரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர். 

இந்த கும்பலுக்கும், சர்வதேச கார்டு மோசடி கும்பல்களுக்கும் தொடர்பு உள்ளதா? எத்தனை ஸ்கிம்மர் கருவிகள் சென்னை ஏடிஎம்களில் பொருத்தப்பட்டுள்ளன என்பது உள்பட பல்வேறு கோணங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்