உமா மகேஸ்வரி கொலை வழக்கில் புதிய திருப்பம் - 3 பெண்கள் உள்பட 7 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை
நெல்லையில் திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர் உள்ளிட்ட மூவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
நெல்லை ரோஸ் நகரில் திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, நெடுஞ்சாலைத் துறையில் ஓய்வுபெற்ற தமது கணவர் முருகசங்கரனுடன் வசித்து வந்தார். இந்நிலையில், அவர் நேற்று கொடூரமான முறையில் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன், பணிப் பெண் மாரி ஆகியோர் இரும்பு கம்பி, கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்டனர். நெல்லையை உறைய வைத்துள்ள இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பதற வைக்கின்றன.
தகவலறிந்து வந்து போலீசார், 3 தனிப்படைகள் அமைத்து விசாரணையை தொடங்கினர். உறவினர்கள் உள்ளிட்ட 70 பேரிடம் விசாரணை தொடங்கியதால், பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இதனிடையே, உடற்கூராய்வு செய்ததில், கழுத்தில் 6 இன்ச் ஆழத்துக்கு கத்தியால் குத்தி, திருகி கொலை செய்யப்பட்ட பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் கொலையாளிகளை உடனடியாக பிடிக்க வேண்டும் என கூறிய திமுக தலைவர் ஸ்டாலின், உமா மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியதால் மேலும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
உறவினர்கள் உள்ளிட்ட 70 பேரிடம் தொடங்கிய விசாரணை, 50, 40 என சுருங்கி, 7 பேரில் நின்றது. கொலை நடந்த விதம் வடமாநில ரகத்தில் இருப்பதால், கொலையாளிகளை பிடிக்க போலீஸ் தீவிரம் காட்டியது. 4 ஆண்கள், 3 பெண்கள் என விசாரிக்கப்படும் நிலையில், கொலை நடந்த நாளில், அந்தப் பகுதியில் சுற்றித்திரிந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
கொலையின் போது, வீட்டில் இருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்விரோத கொலையா, சொத்துக்காகவா, அரசியல் விரோதமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். சினிமா பட பாணியில் கொலை நடந்துள்ள இந்த விவகாரத்தில், தலித் மற்றும் ஆதிவாசி பட்டிலியன ஆணையம் 3 நாளில் பதிலளிக்குமாறு தமிழக டிஜிபிக்கும், மாவட்ட காவல் ஆணையருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது கொலை விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
Next Story