முன்னாள் மேயர் வெட்டி கொலை: சொத்து காரணமாக நடந்த கொலையா..? - போலீஸ் சந்தேகம்
நெல்லையில் திமுக முன்னாள் மேயர் உமா மகேஷ்வரி உள்ளிட்ட 3 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆதாயத்துக்காக நடைபெற்ற கொலை என போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயராக இருந்தவர் உமாமகேஷ்வரி. இவர் தனது கணவர் முருகசங்கரனுடன் நெல்லை அரசு பொறியியல் கல்லூரி அருகே உள்ள ரோஸ் நகரில் வசித்து வந்தார்.
முருகசங்கரன் நெடுஞ்சாலைத்துறையில் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன். மகன் சரவணன் சில ஆண்டுகளுக்கு முன் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இந்த நிலையில் நேற்று, உமாகேஷ்வரி , அவரது கணவர் முருகசங்கரன் மற்றும் வீட்டு பணிப்பெண் மாரி ஆகியோர் வீட்டின் வெவ்வேறு அறைகளில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளனர். முருகசங்கரன், உமா மகேஷ்வரி ஆகியோர் மார்பு மற்றும் முதுகில் கத்தியால் குத்தப்பட்டும், மாரி தலையில் இரும்பு கம்பியால் அடித்தும் கொல்லப்பட்டிருந்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து, தகவல் அறிந்து வந்த மாநகர காவல் ஆணையர் பாஸ்கரன், துணை ஆணையர் அா்ஜுன் சரவணன் மற்றும் போலீசார், உயிரிழந்தவர்களை மீட்டு உடற்கூறு சோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் பரணி, கொலை செய்யப்பட்ட 3 பேரின் உடல்களை மோப்பம் பிடித்துவிட்டு வீட்டில் இருந்து வெளியே சிறிது தூரம் சென்று விட்டு, மீண்டும் வீட்டுக்குள் வந்து நின்றுவிட்டது.
இதையடுத்து பல்வேறு கோணங்களில் விசாரணையை தொடங்கிய போலீசாருக்கு, சொத்து ஆதாயத்துக்காக நடந்த கொலை என்கிற அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. முதற்கட்ட விசாரணைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய, மாநகர காவல் ஆணையர் பாஸ்கரன், சொத்துக்காக கொலை சம்பவம் நடந்துள்ளதாக கூறினார். கொலை செய்யப்பட்டவர்கள் அணிந்திருந்த கம்மல், வளையல், தங்க சங்கிலிகள் உள்ளிட்டவை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன என்றும், பீரோவில் இருந்த நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.
3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், குடும்ப பிரச்சினை காரணமாக கொலை நடந்ததா? என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம் என்றும், குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்றும் பாஸ்கரன் கூறினார். இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை குற்றபிரிவு காவல் நிலையத்தில் கொலை, நகை பணம் காணாமல் போனது என 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், முன்னாள் மேயர் உமா மகேஷ்வரி இல்லத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவரது சகோதரர் மகன் குடும்பத்தினருடன் சொத்து தொடர்பான சண்டை நடந்ததாக கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் உமா மகேஷ்வரி உறவினர்கள் 50 க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப்பகலில் வீடு புகுந்து முன்னாள் பெண் மேயர், அவருடைய கணவர் உள்பட 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story