அத்திவரதர் உற்சவம்- 20ம் நாள் விழா - சுவாமியை தரிசிக்க திரண்ட பக்தர்கள்

அத்திவரதர் உற்சவத்தின் 20ஆம் நாளான இன்று, ஆரஞ்சு நிறப்பட்டு அலங்காரத்தில், அத்திவரதர் அருள்பாலித்து வருகிறார்.
x
கடந்த ஒன்றாம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் இந்த உற்சவத்தில், தினமும் ஏராளமான பக்தர்கள், அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர். நாள்தோறும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ஒவ்வொரு நிற பட்டு ஆடை அலங்காரத்தில் காட்சிதரும் அத்திவரதர், இன்று ஆரஞ்சு நிற பட்டு ஆடையில் காட்சி தருகிறார். அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர். உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி குடும்பத்தினருடன் இன்று காலை அத்திவரதரை தரிசனம் செய்தார். திரைப்பட நடிகை ஊர்வசி உள்ளிட்டோர் அத்திவரதரை தரிசனம் செய்தனர். 

இதனிடையே  அத்தி வரதரை தரிசிக்க, 300 ரூபாய் கட்டண சிறப்பு தரிசனம் தொடங்கப்பட்டுள்ளது.  இதில் நாள் ஒன்றுக்கு ஆன்லைன் மூலம் 500 டிக்கெட்டுகள் வழஙகப்படுகிறது. இதில் மாலை 6 மணி முதல் 10 மணிவரை பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்கலாம். ஆனால் 300 ரூபாய் மற்றும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள 500 ரூபாய் சிறப்பு கட்டண தரிசனத்திலும் காலதாமதம் ஏற்படுவதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய தரிசனத்தின் போது, பக்தர் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வயதான முதியவர்கள், சிறு குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், உடல் நலம் குன்றியவர்கள் மற்றும் அவர்களை அழைத்து வருபவர்கள், அத்திவரதர் தரிசன நிகழ்வை கூடுமானவரை தவிர்க்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்