(18.07.2019) : தமிழக சட்டப்பேரவையில் இன்று
தென்காசி மற்றும் செங்கற்பட்டு ஆகிய நகரங்களை தலைமையிடமாக கொண்டு இரு புதிய மாவட்டங்கள் உதயமாகும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
தென்காசி மற்றும் செங்கற்பட்டு ஆகிய நகரங்களை தலைமையிடமாக கொண்டு, இரு புதிய மாவட்டங்கள் உதயமாகும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில், விதி 110 - ன் கீழ், அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.தமிழகத்தில் அண்மையில் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உதயமாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. எனவே, தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
விரைவில், கும்பகோணம் தனி மாவட்டம் - வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தகவல்
கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு, விரைவில் தனி மாவட்டம் உதயமாகும் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில், இதனை வெளியிட்ட ஆர்.பி. உதயகுமார், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என நம்பிக்கை தெரிவித்தார்.
நல்லகண்ணுவுக்கு அரசு வீடு ஒதுக்கீடு - துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தகவல்
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்ல கண்ணுவுக்கு அரசு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில், இதனை வெளியிட்ட ஓ. பன்னீர் செல்வம், இதேபோல, முன்னாள் அமைச்சர் கக்கன் குடும்பத்திற்கும் வாடகை இல்லாமல் அரசு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
உயருகிறது, ஆம்னி பேருந்து கட்டணம்
படுக்கை வசதி கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு தனி வரி விதிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், இந்த மசோதாவை தாக்கல் செய்தார். இதன்படி, படுக்கை வசதி கொண்ட ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயரும் அபாயம் உருவாகி உள்ளது.
தனியார் சட்டக்கல்லூரி : அரசு விளக்கம்
அரசு சட்டக்கல்லூரிகள் இல்லாத இடங்களில் தனியார் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்கப்படும் என்று தமிழக சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில், கேள்வி நேரத்தின்போது, அமைச்சர் சி.வி. சண்முகம், இந்த தகவலை வெளியிட்டார்.விழுப்புரத்தில் புதிய சட்டக்கல்லூரியை பேரவை கூட்டத்தொடர் முடிவடைந்ததும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைப்பார் என்று சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்தார்.
மனித கழிவு அகற்றம் : வேலுமணி எச்சரிக்கை
மனித கழிவுகளை அகற்றும் பணியில் , மனிதர்களை அரசு ஈடுபடுத்துவது கிடையாது என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திட்டவட்டமாக தெரிவித்தார். சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் பிச்சாண்டி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்தில் குறுக்கிட்ட எஸ்.பி. வேலுமணி, மனித கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை தனியார் ஈடுபடுத்தினால், சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்தார்.
கலைஞர் செம்மொழி தமிழ் விருது : அரசு விளக்கம்
கலைஞர் செம்மொழி தமிழ் விருது, இன்னும் 3 மாதத்தில் வழங்கப்படும் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃ பா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில், செய்தித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் தாயகம் கவி பேசிக்கொண்டிருந்தபோது, குறுக்கிட்ட மாஃ பா பாண்டியராஜன், இந்த தகவலை வெளியிட்டார். கலைஞர்செம்மொழி தமிழ் விருது பெறுவதற்கான தகுதியானவர்களின்விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அமைச்சர் மாஃ பா பாண்டியராஜன் விளக்கம் அளித்தார்.
Next Story