தென்காசி, செங்கல்பட்டு மாவட்டங்கள் உதயம் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு
தென்காசி மற்றும் செங்கல்பட்டு ஆகிய இரண்டு புதிய மாவட்டங்கள் உதயமாகி உள்ளன.
தென்காசி மற்றும் செங்கல்பட்டு ஆகிய இரண்டு புதிய மாவட்டங்கள் உதயமாகி உள்ளன. சட்டப்பேரவையில் விதிஎண் 110ன் கீழ் இதற்கான அறிவிப்பை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதன் மூலம் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளது.
"கும்பகோணம் விரைவில் தனி மாவட்டமாகிறது"
தென்காசி மற்றும் செங்கல்பட்டு புதிய மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் விரைவில் உருவாகும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மக்களின் கோரிக்கை அரசுக்கு கிடைத்துள்ளதாகவும், இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
"தனியார் சட்டக்கல்லூரிகள் துவங்க அனுமதி"
அரசு சட்டக்கல்லூரிகள் இல்லாத இடங்களில், தனியார் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய காஞ்சிபுரம் தொகுதி திமுக உறுப்பினர் எழிலரசன், தமிழகத்தில் சட்டக் கல்லூரிகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்' என வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், அரசு சட்டக் கல்லூரிகள் இல்லாத இடங்களில், தனியார் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிப்பதாக தெரிவித்தார். அதிமுக அரசு பொறுப்பேற்பதற்கு முன் 7 அரசு சட்டக் கல்லூரிகள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது 12 ஆக அதிகரித்திருப்பதாக குறிப்பிட்டார். அதுமட்டுமின்றி, விழுப்புரத்தில் அமைந்துள்ள புதிய அரசு சட்டக்கல்லூரியை, பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் முதலமைச்சர் திறந்து வைப்பார் என்ற தகவலையும், அப்போது அவர் வெளியிட்டார்.
"மனித கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தக் கூடாது - அமைச்சர் எச்சரிக்கை
மனித கழிவுகளை அகற்றும் பணியில், மனிதர்களை அரசு ஈடுபடுத்துவது இல்லை எனவும், கழிவுகளை அகற்றுவதற்கு தேவையான இயந்திரங்கள் அரசிடம் இருப்பதாகவும், உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். திமுக உறுப்பினர் பிச்சாண்டி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய போது, அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார். மேலும், மனித கழிவுகளை அகற்றும் பணியில், மனிதர்களை தனியார் ஈடுபடுத்தினால், அவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கவும் சட்டத்தில் இடம் இருக்கிறது என்று அமைச்சர் வேலுமணி எச்சரிக்கை விடுத்தார்.
"45 பள்ளிகளில் மட்டுமே தற்காலிக நூலகங்கள்"
தமிழகத்தில் ஆயிரத்து 248 பள்ளிகளில் 45 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லாத நிலையில், அங்கு ஆசிரியர்கள் வேலை செய்ய இயலாது என்று, அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். பேரவையில், திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், இந்த 45 பள்ளிகளில் மட்டும் தற்காலிகமாக நூலகங்கள் அமைக்கப்படும் என்றும், மாணவர்கள் சேர்க்கை நடந்த பின் மீண்டும் பள்ளிகளாக இயங்கும் எனவும் தெரிவித்தார்.
Next Story