எப்போது இடிந்து விழுமோ என்ற நிலையில் அரசு நூலகம்...
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே, எப்போது இடிந்து விழுமோ என்ற ஆபத்தான நிலையில், இருக்கும் நூலகத்தை புதுப்பித்து தருமாறு வாசிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேளிகுளம் பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள கே.ஜி. மாணிக்கம் நினைவு நூலகம், 5 ஆயிரம் புத்தகங்களுடன் இயங்கி வருகிறது. அரசுப் போட்டித் தேர்வுகள் உள்ளிட்ட அனைத்து தேர்வுகளுக்கும் இங்கே புத்தகங்கள் உள்ளன. இதனால், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் நூலகத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நூலகத்தின் ஜன்னல்கள், கஜா புயலில் காணாமல் போயின. சுவர்கள் அனைத்தும் சேதமான நிலையில், பக்கவாட்டு சுவர்கள் பலமிழந்து உள்ளன. மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்து, எலும்புக் கூடாக காட்சியளிக்கின்றன. இதனால், புத்தக வாசிப்பாளர்கள் மற்றும் நூலகர்கள் இடையே எப்போதும் பீதி நிலவுகிறது. அடிக்கடி மின்சார தடை இருப்பதால், மெழுகுவர்த்தி மூலம் நூலகர்கள் வெளிச்சம் ஏற்படுத்துவது மற்றொரு வேதனை. உடனடியாக கவனத்தில் எடுத்து, நூலகத்தை புதுப்பித்து தர வேண்டும் என்பது புத்தக வாசிப்பாளர்களின் கோரிக்கை.
Next Story