டிக் டாக், ஸ்மியூல் செயலியால் பிரிந்து போன குடும்பம் : மனைவியின் ஆண் நண்பர்களால் குழந்தைக்கு கொடுமை என புகார்
டிக் டாக் உள்ளிட்ட செயலியால் ஒரு குடும்பமே பிரிந்த நிலையில், பாதிக்கப்பட்ட குழந்தை காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
திருச்சியைச் சேர்ந்தவர் மகேஷ் நெல்லையை சேர்ந்த திவ்யா என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவர்களுக்கு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ள நிலையில் ஸ்மார்ட் போன் வாயிலாக இவர்களின் வாழ்க்கையில் வந்தது விபரீதம். டிக் டாக், ஸ்மியூல் போன்ற செயலிகளில் தீவிரம் காட்டி வந்த திவ்யாவின் நடவடிக்கை மகேஷூக்கு பிடிக்கவில்லை.
இதனால் இருவருக்கும் இடையே பிரச்சினை முற்றியதில் கடந்த 2017ல் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். தாய் வீட்டுக்கு தனது குழந்தையுடன் வந்த திவ்யா, விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார். ஆனால் தன் மகன் மற்றும் மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என விரும்பிய மகேஷ் திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் இந்த வழக்கில் திவ்யா ஆஜராகததால் குழந்தை தந்தையுடன் இருக்கவேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆனால் தன்னுடன் வாழ வருமாறு மகேஷ் பலமுறை அழைத்தும் திவ்யா வரவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் உள்ள ஒரு பள்ளியில் இவர்களின் மகன் படித்து வந்துள்ளார். சிறுவனின் உடலில் காயங்கள் இருப்பதை பார்த்த ஆசிரியர்கள் அதுகுறித்து கேட்டுள்ளனர். அப்போது தனது தாயின் ஆண் நண்பர் அடித்ததால் தான் காயம் ஏற்பட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து பள்ளியின் ஆசிரியர்கள் குழந்தைகள் நலக்குழுவிடம் புகார் அளித்தனர். சிறுவனை மீட்ட குழந்தைகள் நலக் குழுவினர், காப்பகத்தில் ஒப்படைத்தனர். அதன்பிறகு பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து இருவரும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
உரிய விசாரணைக்கு பிறகு மீண்டும் சிறுவன் தாயிடமே ஒப்படைக்கப்பட்டார். ஆனால் தன் மனைவியிடம் மகன் இருந்தால் மேலும் பாதிப்பு தான் என கூறிய மகேஷ், தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்தார். சமூக வலைத்தள செயலிகளால் இங்கே ஒரு குழந்தையின் வாழ்க்கை பல சிக்கல்களை எதிர்நோக்கி இருக்கிறது என்பதை உணர்த்துகிறது இந்த சம்பவம்....
Next Story