யார் இந்த முகிலன்..?
காணாமல் போனதாக தேடப்பட்டுவந்த சமூக செயற்பட்டாளர் முகிலன், 141 நாட்களுக்கு பிறகு ஆந்திராவில் கண்டுபிடிக்கப்பட்டார். யார் இந்த முகிலன், எதனால், அவர் மாயமானது பெரும் அதிர்வை ஏற்படுத்தியது என்பது குறித்து தற்போது தெரிந்து கொள்ளலாம்...
ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சேர்ந்த விவசாய குடும்பத்தில் பிறந்தவர் முகிலன். பாலிடெக்னிக்கில் என்ஜினியரிங் படித்த அவர், தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் 4 ஆண்டுகள் பணிபுரிந்தார். சுற்றுச்சூழல் சீர்கேடுகளைக் கண்டு பொறுக்க முடியாமல் அரசுப் பணியைத் துறந்த முகிலன், நொய்யல் ஆற்றில் சாயக் கழிவுநீரைத் திறந்து விடுவதற்கு எதிராக போராட்டத்தை நடத்தி சாயப்பட்டறைகளை மூட வைத்தார்.
இதே போன்று காவிரி படுகையில் மணல் அள்ளுவதற்கு எதிராக போராட்டம் நடத்திய முகிலன், கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் போது 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை எதிர்த்தும் முகிலன் போராடினார். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் பொதுமக்கள் அல்ல என்று கூறிய முகிலன், இது தொடர்பாக ஆவணப்படம் ஒன்றையும் வெளியிட்டார்.
இதனிடையே, கரூரை சேர்ந்த பெண் ஒருவர் குளித்தலை மகளிர் காவல்நிலையத்தில் முகிலன் மீது பாலியல் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் முகிலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி மதுரைக்கு செல்வதாக கூறி, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு சென்ற முகிலன் திடீரென மாயமானார். இதை தொடர்ந்து முகிலனை மீட்கவேண்டும் என அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தன.
முகிலன் எங்கே? என்ற ஹேஸ்டேக் மூலம் சமூக வலைதளங்களிலும் இளைஞர்கள் டிரெண்ட் செய்தனர். முகிலன் குறித்து ரயில்வே போலீசாரும், தமிழக போலீசாரும் விசாரித்துவந்த வழக்கில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இந்த நிலையில், சமூக ஆர்வலர் ஹென்றி டிபேன் ஆட்கொணர்வு மனு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், முகிலனை கண்டுபிடித்து தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று சுவரொட்டி மூலம் அறிவிப்பை வெளியிட்டனர்.
கடந்த மாதம் 27ஆம் தேதி முகிலன் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர். இதனையடுத்து, வழக்கை 8 வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இந்த நிலையில், முகிலனை திருப்பதி ரயில் நிலையத்தில் மூன்று காவலர்கள் அழைத்து செல்வது போன்ற காட்சிகள் சமூக வலைதளத்தில் நேற்று வெளியானது.
இது உறுதி செய்யப்பட்டதால், முகிலனை தங்களிடம் ஒப்புடைக்குமாறு தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து, திருப்பதியில் இருந்து காட்பாடி ரயில்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட முகிலனை, தமிழக போலீசாரிடம் ஆந்திர போலீசார் ஒப்படைத்துள்ளனர். அங்கிருந்து போலீசார் முகிலனை அழைத்து சென்றபோது, அவரின் ஆதரவாளர்கள் சூழ்ந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. முகிலனை விடுவிக்க கோரி அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட முகிலனுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அங்கிருந்து வேலூருக்கு முகிலனை அழைத்து சென்ற போலீசார், சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Next Story