சிலை கடத்தல் தடுப்பு வழக்கில் விவரங்களை அறிக்கையாக அளிக்க தமிழக அரசுக்கு இரண்டு வாரம் அவகாசம் - சென்னை உயர்நீதிமன்றம்
சிலை கடத்தல் தடுப்பு வழக்கில், பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் நடைமுறைப்படுத்தியது தொடர்பாக விவரங்களை அறிக்கையாக அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு இரண்டு வாரம் அவகாசம் வழங்கியுள்ளது.
சிலை கடத்தல் வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் அமல்படுத்த அரசு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தரப்பில், அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிலைக்கடத்தல் வழக்குகள் விசாரணைக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை எனவும், நீதிமன்ற உத்தரவு இல்லாமல் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு பதிலளித்த தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்ய முடியும் என எதிர்ப்பு தெரிவித்தார். உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்கும் அதிகாரம் இருப்பதாக கூறிய நீதிபதிகள், இந்த வழக்கு தாக்கல் செய்யாவிட்டாலும், தாமாக முன் வந்தும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்க முடியும் என்றனர். அவகாசம் வழங்கியும் நீதிமன்ற உத்தரவுகள் அமல்படுத்தவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை இரண்டு வாரங்களில் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டனர்
Next Story