சென்னை : தவணையில் பணம் செலுத்த வைத்து கோடிக்கணக்கான ரூபாயுடன் உரிமையாளர் தலைமறைவு
சென்னையில், போலியான வாக்குறுதி மூலம் கோடிக் கணக்கான ரூபாய் மோசடி செய்த புகாரில், நிதிநிறுவன ஊழியர்கள் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் செயல்பட்டு வந்த தனியார் நிறுவனம் ஒன்று, குறிப்பிட்ட தொகையை, ஒரு காலக் கெடு வரை தவணை முறையில் செலுத்தினால், 50 லட்சம் ரூபாயாக திருப்பி தரப்படும் என்று கூறியதை நம்பி பலர் லட்சக் கணக்கான ரூபாய் பணம் செலுத்தியுள்ளனர். தவணை காலம் முடிந்த நிலையில், வாடிக்கையாளர்கள் பணத்தை திருப்பி கேட்டபோது, அது மோசடி நிறுவனம் என்பது தெரியவந்துள்ளது. நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ராணுவ வீரர் சரவணகுமார், 35 ஆயிரம் ரூபாய் ஏமாற்றப்பட்டதாக அளித்த புகாரை விசாரித்த போது அந்த நிறுவன உரிமையாளர் அம்பத்தூரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பதும், அவர் தலைமறைவானதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த நுங்கம்பாக்கத்தை சேர்ந்த கார்த்திக், சத்யநாராயணன் திருவொற்றியூரை சேர்ந்த கனிமொழி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததை அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து 10 சிம் கார்டுகளை பறிமுதல் செய்த போலீசார், மோசடியில் ஈடுபட்டு தலைமறைவான நபரை தேடி வருகின்றனர்.
Next Story