அசர வைக்கும் திருச்சி அரசுப் பள்ளி : கராத்தே, சிலம்பம் உள்ளிட்டவை கற்றுத்தரும் ஒரு பள்ளி
பளபளக்கும் வகுப்பறைகள், ஸ்மார்ட் கிளாஸ் என்பதை தாண்டி மாணவர் சேர்க்கையிலும் அபாரம் காட்டி திருச்சியில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.
திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக வழக்கமான ஒரு அரசுப் பள்ளியை போல தான் செயல்பட்டு வந்தது. ஆனால் இந்த பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்த்த பெற்றோர் மற்றும் பள்ளியின் ஆசிரியர்களின் கூட்டு முயற்சியால் இன்று தனித்துவம் பெற்ற ஒன்றாக இருக்கிறது....
மாணவர்களுக்கு தேவையான ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், சுத்தமான கழிவறைகள் என அனைத்தும் இங்கே இருக்கிறது. ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இதன் முத்தாய்ப்பாக இந்த ஆண்டு ஒன்றாம் வகுப்பில் 100 மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளது. தனியார் பள்ளிகளில் சேர்த்தால் தான் பிள்ளைகள் ஆங்கிலம் சரளமாக பேசும் என்போரின் கூற்றை தவிடுபொடியாக்கும் வகையில் இந்த பள்ளி செயல்படுகிறது.பள்ளியில் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிப்பது மட்டுமின்றி கராத்தோ, யோகா, சிலம்பம் உள்ளிட்டவைகளும் கற்றுத் தரப்படுகிறது. விளையாட்டுகளிலும் மாணவர்கள் சிறந்து விளங்குவதால் இந்த பள்ளியை நோக்கி வருவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
மாணவர் சேர்க்கைக்காக விளம்பரம் செய்ய தனியார் பள்ளிகள் முட்டி மோதும் நிலையில் அரசுப் பள்ளி ஒன்று தன் செயல்பாடுகளால் மக்களை ஈர்க்கிறது.. இதுபோன்ற அரசுப் பள்ளிகளை உரிய நேரத்தில் கண்டறிந்து வெளிக்கொண்டு வருவது நமது பொறுப்பும் கூட...
Next Story