வைகோ மீதான தேசத் துரோக வழக்கு - நாளை நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது
வைகோ மீதான தேசத் துரோக வழக்கில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற வைகோ, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு கடந்த ஆண்டு மாற்றப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி சாந்தி விசாரித்தார். வழக்கில் குற்றச்சாட்டு பதிவு, 9 அரசு தரப்பு சாட்சிகளிடம் சாட்சி விசாரணை மற்றும் சாட்சியத்தின் அடிப்படையில் வைகோவிடம் கேள்விகளைக் கேட்டு பதில் பதிவு செய்யும் நடைமுறைகள் அனைத்தும் முடிவடைந்தன. இதனையடுத்து தீர்ப்பு நாளை காலை 10.30 மணியளவில் வைகோ மீதான தேச துரோக வழக்கில் தீர்ப்பளிக்கப்பட உள்ளது. ஒருவேளை வைகோவுக்கு 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை வழங்கப்பட்டால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் படி அவர் ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு போட்டியிட முடியாத சூழ்நிலை உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story