சென்னை : போலி டிக்கெட் பரிசோதகரை பிடித்து கொடுத்த பெண்
செய்திகளில் வெளியான தகவல் அடிப்படையில், வாடகை வீட்டில் தங்கியிருந்த போலி ரயில்வே டிக்கெட் பரிசோதகரை, வீட்டின் உரிமையாளர் போலீஸில் பிடித்து கொடுத்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
சென்னை, தாம்பரத்தை அடுத்த, புதுபெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயந்தி. அவரது, வீட்டில் அலிஜியானி என்பவர் மூன்று வாரங்களுக்கு முன்பு, வாடகைக்கு குடியேறியுள்ளார். இந்த நிலையில், அலிஜியானியின் புகைப்படத்துடன் போலி டிக்கெட் பரிசோதகர் என்றும், பயணிகளை ஏமாற்றி வருவதாகவும் செய்தி வெளியானது. இதைப் பார்த்த ஜெயந்தி, பீர்க்கன்காரணை போலீசுக்கு தகவல் அளித்துள்ளார். விரைந்து வந்த போலீசார், அலிஜியானியை பிடித்து, அவரிடமிருந்து, போலி அடையாள அட்டை, அபராத புத்தகம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
போலீசாரின் தீவிர விசாரணையில் அலிஜியானி மீது, சேலம் ரயில்வே காவல் நிலையத்தில், வழக்கு இருப்பது தெரியவந்ததால் சேலம் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். செய்திகளை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்த வீட்டின் உரிமையாளர் ஜெயந்திக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
Next Story