அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் ராமேஸ்வரம் நண்டுகள்
ராமேஸ்வரத்தில் பிடிக்கப்படும் நண்டுகள், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது
ராமேஸ்வரம் தீவு பகுதியில் வல்லம், கட்டுமரங்களில் சென்று தொழில் செய்து வரும் பாரம்பரிய மீனவர்கள் பிடித்து வரும நண்டு வகைகளுக்கு தற்போது வெளிநாடுகளில் தேவை அதிகரித்துள்ளது.
தீவுப்பகுதி மற்றும் மன்னார் வளைகுடாவில் கிடைக்கக்கூடிய நண்டுகள் மருத்துவ குணம் உள்ளதாகவும், ருசி மிகுந்ததாகவும் இருக்கின்றன.
இதனால், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து வரக்கூடிய வியாபாரிகள் தீவு பகுதிகளில் பல நிறுவனங்களை அமைத்து நண்டுகளை கொள்முதல் செய்கின்றனர்.
நண்டுகளை தண்ணீரில் சுத்தம் செய்து, வெந்நீரில் அவித்து பின் உலரவைத்து பாலித்தீன் கவர்களில் அடுக்கி ஐஸ் கட்டிகளைக் கொண்டு பதப்படுத்துகின்றனர்.
அவற்றை ராமேஸ்வரத்தில் இருந்து பாதுகாப்பாக தூத்துக்குடிக்கு கொண்டு சென்று அங்குள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் நண்டுகளின் ஓடுகளையும், தேவையற்ற பொருட்களையும் நீக்கி, சதையை மட்டும் நன்கு பதப்படுத்தி, கப்பல் மூலமாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.
தற்போது வெளிநாடுகளில் விலை அதிகமாக கிடைப்பதால் மற்ற மாநிலங்களில் இருந்து நண்டுகளை வாங்க ராமேஸ்வரத்தில் வியாபாரிகள் குவிந்து வருகின்றனர்.
அதேநேரம், இரவு பகல் பாராமல் கடலிலேயே தங்கி பிடித்து வரக்கூடிய நண்டுகளுக்கு போதிய விலை கிடைப்பதில்லை என்று மீனவர்கள் வருத்தம்
தெரிவிக்கின்றனர்.
பாரம்பரிய மீனவர்களுக்கு நண்டுகளை பதப்படுத்தவும் ஏற்றுமதி செய்யவும், பயிற்சி கொடுத்தால் தங்கள் வாழ்வாதாரம் மேம்படும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.
கடலோர கிராமத்து மீனவர்கள் பிடிக்கும் நண்டுகள் அமெரிக்கா வரை சென்றாலும், மீனவர்கள் வாழ்வோ கரை தாண்டுவது கூட இல்லை.
Next Story