புதிய டிஜிபி ஜே.கே. திரிபாதி பற்றி ஒரு தொகுப்பு
தமிழகத்தின் புதிய காவல்துறை டி.ஜி.பி.யாக ஜே.கே.திரிபாதி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை பற்றிய ஒரு தொகுப்பு
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஜே.கே. திரிபாதி 1979-ல் சம்பல்பூர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பிரிவில், பொலிட்டிகல் சயின்ஸ் படித்துள்ளார். பின்னர் டெல்லியில் உள்ள நேரு பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பொலிட்டிகல் சயின்ஸ் படித்த அவர், 1985ல் காவல்துறை பணியில் சேர்ந்தார். 1988 ஆம் ஆண்டு மதுரை புறநகர் பிரிவில் கூடுதல் எஸ்.பி. ஆக தமிழகத்தில் பணியை தொடங்கினார், திரிபாதி. 1989 ஆம் ஆண்டு சென்னை பரங்கிமலை மதுவிலக்கு பிரிவில் எஸ்.பி. யாக பதவி உயர்வு பெற்று பணியாற்றிய திரிபாதி,
பின்னர் நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் எஸ்.பி.யாக பணிபுரிந்தார். 1999 ஆம் ஆண்டு திருச்சி மாநகர ஆணையராக பணியாற்றிய அவர், பின்னர், 2001 முதல் 2004 ஆம் ஆண்டு வரை சென்னையில் தெற்கு மண்டல இணை ஆணையராக பணி புரிந்தார். 2005 முதல் 2011 ஆம் ஆண்டு வரை சுமார் ஆறு ஆண்டுகள் தெற்கு மண்டல ஐ.ஜி.யாக பணிபுரிந்த திரிபாதி, 2011 ஆம் ஆண்டு சென்னை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
சென்னை மாநகர காவல் ஆணையராக இவர் இருந்த போது தான, தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வங்கிக் கொள்ளையர்கள் 5 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2015 ஆம் ஆண்டு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாகவும், 2012 முதல் 2015 வரை சிறைத்துறையின் கூடுதல் டிஜிபி ஆகவும் திரிபாதி பணியாற்றினார். தற்போது காவல்துறை சீருடை பணியாளர் தேர்வாணைய டிஜிபியாக சென்னையில் பணியாற்றி வரும் அவர், சிறப்பான சேவைக்காக, 2002ஆம் ஆண்டு பிரதமரின் விருதையும், 2011இல் குடியரசுத் தலைவரின் விருதையும் பெற்றுள்ளார். தற்போது, தமிழகத்தின் புதிய டிஜிபியாக திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார்.
Next Story