8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கு : சிறப்பாக துப்பு துலக்கிய பொன். மாணிக்கவேல்...
8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில், ஐஜி பொன் மாணிக்கவேலின் சிறப்பு புலன் விசாரணையால், சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில், ஐஜி பொன் மாணிக்கவேலின் சிறப்பு புலன் விசாரணையால், சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. ஆள்மாறாட்டம் செய்து தப்ப முயன்ற ராணுவ வீரர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள பட்டவர்த்தி கிராமத்தை சேர்ந்த சின்னசாமி, 2011 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ராமர், பாலு, கிருஷ்ணன் ஆகிய சகோதரர்களும், அவர்களது தாய் வளர்மதி மற்றும் மீனாட்சி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் அனைவரும் ஜாமினில் வெளி வந்தனர். இதனிடையே, லாரி ஓட்டுநர் ஒருவரை தாக்கிய வழக்கில், போலீசாருக்கு பயந்து, கிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் கிருஷ்ணனின் அண்ணனான கோவிந்தசாமி, தம்பி கிருஷ்ணனின் சான்றிதழ்களை தன்னுடையது என கூறி 2006 ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்துள்ளார். ஆதார், வாக்காளர், டிரைவிங் லைசென்ஸ் என 26 ஆவணங்களை தம்பியின் பெயரில் போலியாக தயாரித்துள்ளார். சின்னசாமி கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் கிருஷ்ணன், தான்தான் என்றும், ராணுவத்தில் பணிபுரிந்த தன் மீது போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளதாகவும் கூறி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அப்போதைய ஐஜி பொன் மாணிக்கவேலை விசாரித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டது.
அதன்படி, பட்டவர்த்தி கிராமத்துக்கு நேரில் சென்ற பொன் மாணிக்கவேல் தீவிர விசாரணை மேற்கொண்டார். கிருஷ்ணனின் புகைப்படத்தை காட்டி அவர் படித்த பள்ளியில் விசாரிக்கும் போது அது கிருஷ்ணனின் அண்ணன் கோவிந்தசாமி என்பது தெரியவந்தது. கொள்ளை வழக்கில் தற்போது சித்தூர் சிறையில் உள்ள அவர், தனது பெயரை கப்பா என்று மாற்றியுள்ளதும் தெரிய வந்தது. இது குறித்த அறிக்கையை பொன் மாணிக்க வேல் தர்மபுரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். பின்னர் அந்த அறிக்கை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், ராமு மற்றும் பாலுவுக்கு அளிக்கப்பட்ட ஆயுள்தண்டனையை உறுதி செய்தனர். கிருஷ்ணன் என்று ஆள்மாறாட்டம் செய்த கோவிந்தசாமி மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்ட நீதிபதிகள், கொலை வழக்கிலிருந்து காப்பாற்ற கோவிந்தசாமிக்கு உதவிய காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலி சான்றிதழ்கள் அளித்த வருவாய்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக உள்ள பொன் மாணிக்க வேலின் சிறப்பான விசாரணையால் இவ்வழக்கில் துப்பு துலங்கி உள்ளது.
Next Story