ஜூலை 1 முதல் புதிய ரயில்வே கால அட்டவணை : 7 நிமிடங்களுக்கு ஒரு மின்சார ரயில் சேவை

ஜூலை ஒன்றாம் தேதி முதல், சென்னையில், 7 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஜூலை 1 முதல் புதிய ரயில்வே கால அட்டவணை : 7 நிமிடங்களுக்கு ஒரு மின்சார ரயில் சேவை
x
சென்னை கடற்கரை - தாம்பரம்- செங்கல்பட்டு - திருமால்பூர்- அரக்கோணம் மார்க்கத்தில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரத்தில் 7 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்றும், சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், கும்மிடிபூண்டிக்கும், சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி, செங்கல்பட்டுக்கும் புதிய மின்சார ரயில் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அரக்கோணம் - வேளச்சேரி; தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே காலை மற்றும் மாலையில் இயக்கப்படும் மகளிர் சிறப்பு மின்சார ரயில்களில், சில பெட்டிகளில் இருபாலரும் பயணிக்கும் வகையில் சேவை மாற்றப்பட உள்ளது என்றும், சென்ட்ரல் - ஆவடி மற்றும் கும்மிடிபூண்டி - செங்கல்பட்டு மார்க்கத்தில் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்ட 8 மின்சார ரயில்கள், இனி வழக்கமான சேவையாக மாற்றப்பட உள்ளது என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதவிர, பெரும்பாலான புறநகர் மின்சார ரயில்களின் புறப்படும் நேரத்தில் 5 முதல் 15 நிமிடம் வரையும், சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் பல விரைவு ரயில்களின் நேரமும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து காலை 8:15 மணிக்கு புறப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ், இனி 8:25 மணிக்கும், இரவு 7:50 மணிக்கு புறப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், இனி 8:10 மணிக்கும், இரவு 10:40 மணிக்கு புறப்படும் உழவன் எக்ஸ்பிரஸ், இனி 10:55 மணிக்கும் புறப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காலை 7:50 மணிக்கு புறப்படும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், இனி 7:40 மணிக்கும், மதியம் 3:35 மணிக்கு புறப்படும் லால்பாக் எக்ஸ்பிரஸ், இனி 3:30 மணிக்கும் புறப்படும் எனவும் ரயில்வே கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு 11:15 மணிக்கு புறப்படும் பெங்களூரு மெயில், 20 நிமிடங்கள் முன்னதாக இனி 10:55 மணிக்கு புறப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்