ரஷ்ய பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு : விளக்கம் அளிக்க காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
ஆன்மீக சுற்றுப்பயணம் வந்த போது பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்ட ரஷ்ய பெண், அந்த வழக்கில் சாட்சியளிக்க இந்தியா வருவாரா என்று விளக்கமளிக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரஷ்ய நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர், ஆன்மிக சுற்றுப்பயணமாக கடந்த ஆண்டு திருவண்ணாமலை வந்தார். அங்குள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தபோது, விடுதி நிர்வாகி பாரதி என்பவரால் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாரதி மற்றும் அவரது சகோதரர் நீலகண்டன் உள்பட பலரை கைது செய்தனர். இந்த நிலையில் நீலகண்டன் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, பாதிக்கப்பட்ட ரஷ்ய பெண் இந்தியாவில் இல்லை எனவும், ரஷ்யாவுக்கு திரும்பி விட்டதாகவும், அவர் இன்னும் முழுமையாக சாட்சியம் அளிக்கவில்லை என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கில் சாட்சியம் அளிக்க அவர் மீண்டும் இந்தியா வருவாரா? அவ்வாறு வருவதற்கு எவ்வளவு நாட்கள் ஆகும்? நேரில் ஆஜராகும்படி அவருக்கு எப்படி சம்மன் அனுப்ப முடியும்? என்பது குறித்து விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை தள்ளிவைத்தார்.
Next Story