உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாமல் அல்லல்படும் திண்டுக்கல் மக்கள் - எப்போது தீர்வு கிடைக்கும்..?

உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் உள்ளாட்சி அமைப்புகள் எந்த மாதிரியான பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கிறது என்பதைச் விளக்குகிறது இந்த தொகுப்பு.
x
மக்களின் எதிர்கால தேவைக்கு பயன் அளிக்கும் திட்டங்கள் எதையும் திண்டுக்கல் மாநகரட்சி செயல்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர் பொதுமக்கள். அடிப்படை தேவைகளை யாரிடம் கூறுவது என்று கூட தெரியாமல் தவிப்பதாகவும், யாரிடம் சென்று தங்கள் குறைகளை கூறுவது என்று தெரியாமலும் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். 

முறையாக ஆய்வு செய்யாமல் தீட்டப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதற்காக தோண்டப்பட்ட சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர், உள்ளூர்வாசிகள். குறைகளை களையக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டால் சமரசம் பேச வரும் அதிகாரிகள், குறைகள் தீர்க்கப்படும் என்று வாய்மொழியாக கூறிவிட்டு, அவற்றை நிறைவேற்றுவது இல்லை என்று ஆதங்கப்படுகிறார்கள் மக்கள்.

உள்ளாட்சி தேர்தல் நடத்தப் படாததால், 48 வார்டுகளை கொண்ட திண்டுக்கல் மாநகராட்சி ஆணையரிடத்தில்  பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும் எந்தவொரு நலதிட்டமும் மக்களை சென்றடையாத நிலையில், மாநகராட்சியின் செயல்பாடு சிறப்பாக இல்லை என்று குற்றம்சாட்டுகின்றனர், திண்டுக்கல் பகுதிவாசிகள். மாநகராட்சிக்கு உட்பட்ட அனேக இடங்கள் குப்பை கிடங்காகவே காட்சியளிப்பதால், சுகாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.

வீட்டு வரி, குடிநீர் வரி என்று பல வரிகள் வசூலிக்கப்பட்டாலும் தங்களுக்கான அடிப்படை வசதிகள் எதுவும் முறைப்படி செய்து தரப்படவில்லை என்ற புகார் வலுக்கிறது. ஆட்டோ ஓட்ட சாலையே இல்லாத நிலையில், சாலை வரி செலுத்தி வருவதாக வேதனை தெரிவிக்கிறார்கள், ஆட்டோ ஓட்டுநர்கள். தங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் செயல்பட தங்களுக்கான பிரதிநிதியை தேர்வு செய்ய ஆர்வமுடன் காத்திருக்கின்றனர், திண்டுக்கல் பகுதி மக்கள்.

Next Story

மேலும் செய்திகள்