"சதுரங்க வேட்டை" பட பாணியில் நூதன மோசடிகள்... மோசடி கும்பலுடன் கை கோர்த்த சினிமா உதவி இயக்குநர்
சதுரங்க வேட்டை பட பாணியில், சினிமா உதவி இயக்குனர் ஒருவர் மோசடி கும்பலுடன் சேர்ந்து அரங்கேற்றிய நூதன மோசடி சம்பவங்கள் போலீசாரையே அதிர வைத்துள்ளன.
கன்னியாகுமரி மாவட்டம், சுவாமிநாதபுரத்தை சேர்ந்த தண்ணீர் லாரி ஓட்டுநர் அரவிந்த். கடந்த 15ம் தேதி, அப்பகுதியில் உள்ள டீகடையில் நின்று கொண்டிருந்த அரவிந்திடம், மர்ம நபர் ஒருவர் அவரை பணக்காரர் ஆக்குவதாக கூறி பேச்சு கொடுத்துள்ளார். இரிடியம் வாங்கி வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும், வெளிநாடுகளில் விற்றால், கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் மூலம் மயக்கிய அந்த மர்ம நபர், அரவிந்தை ஜான் ஆல்வின் பிரபு என்ற நபரிடம் அழைத்துச்சென்றுள்ளார். இரீடியத்தை பெற 25 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் தருமாறு கூறிய ஆல்வின் பிரபு, இரீடியத்தை பெற்ற பின் மீதி 25 ஆயிரம் ரூபாயை வாங்கி கொள்வதாக கூறியுள்ளார்.
இதன் மூலம் தன் பணக்கஷ்டம் தீர்ந்துவிடும் என்று நம்பிய அரவிந்த், அந்த கும்பல் கூப்பிடும் இடத்திற்கெல்லாம் சென்றுள்ளார். 2 நாள்கள் கழித்து, அஞ்சு கிராமம் பால்குளம் பகுதிக்கு அரவிந்தை அழைத்து சென்ற அந்த கும்பல், அவர் வைத்திருந்த 25 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறித்துவிட்டு இரீடியத்தை கொடுக்காமல் ஏமாற்றியுள்ளது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அரவிந்த் மோசடி கும்பல் குறித்து அஞ்சுகிராமம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கிறார்.
இதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், கன்னியாகுமரி டி.எஸ்.பி பாஸ்கரன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்த நிலையில், ஜான் ஆல்வின்பிரபு, நாகராஜன், சதீஸ்குமார் ஆகியோர் போலீசார் வசம் சிக்கினர். அவர்களிடம் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதில் முதல் குற்றவாளியான ஆல்வின்பிரபு ஏற்கனவே குண்டாசில் கைது செய்யப்பட்டு விடுதலை ஆகியுள்ளார். ரைஸ் புல்லிங் மூலம் சம்பாதித்த பணத்தில் தனது சொந்த ஊரில் சியோன் புரத்தில் சொந்தமாக சொகுசு வீடு ஒன்றும் கட்டி வந்துள்ளார். 2 வது குற்றவாளியான நாகர்கோவிலை சேர்ந்த சதீஸ்குமார் உதவி இயக்குநராக பல படங்களில் பணியாற்றி வந்துள்ளார். சொந்தமாக படம் எடுக்க வேண்டும் என நினைத்துகொண்டிருந்த தருணத்தில், சென்னையில் வேறொரு ரைஸ் புல்லிங் கும்பலால் ஏமாற்றப்பட்டு பணத்தை இழந்துள்ளார். இதை தொடர்ந்து யூ டியூப் மூலம் நூதன முறையில் மோசடி செய்யும் முறைகள் குறித்து கற்ற சதீஸ்குமார், இந்த மோசடி கும்பலில் இணைந்திருக்கிறார்.
எப்படியாவது கஷ்டம் தீர்ந்துவிடாதா என பணத்திற்காக ஏங்கும் மக்களின் ஆசையையும், அறியாமையும் தான் இது போன்ற கும்பலின் இலக்கு. கேரளா, பாண்டிச்சேரி, தஞ்சை, கரூர், குமரி என பல பகுதிகளை சேர்ந்த, ஏராளமான மக்கள் இந்த மோசடி கும்பலிடம் சிக்கி, லட்சக்கணக்கான பணத்தை பறிகொடுத்துள்ளனர். ஆனால், யாரும் புகார் அளிக்காத நிலையில், சுதந்திரமாக சுற்றி வந்த கும்பல், அரவிந்தின் புகாரால் போலீசார் வசம் சிக்கியுள்ளது. இந்த கும்பலுக்கு, சென்னையை சேர்ந்த பிரபல மோசடி கும்பலுடன் தொடர்பு உள்ளது என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்களிடம் இருந்து 14 புள்ளி 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான 57 சவரன் நகைகளை பறிமுதல் செய்த போலீசார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story