பிரதமரின் தனி உதவியாளர் என்று கூறி தனியார் தொண்டு நிறுவனம் நடத்தி வருபவரிடம் பண மோசடி
பிரதமரின் தனி உதவியாளர் என கூறி, தனியார் தொண்டு நிறுவனம் நடத்தி வருபவரிடம் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
சுரேஷ்பாபு என்பவர் கடந்த ஓராண்டாக தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். இவரின் நண்பர் செளந்தரராஜன் என்பவர், முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன ராவின் சகோதரர் என கூறி ரவீந்திரபாபு என்பவரை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். பிரதமரின் தனி உதவியாளர் என ஹோடா என்பவரை சுரேஷ்பாபுவிடம் ரவீந்திரபாபு அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். தொலைபேசி உரையாடலின்போது, ஹோடா தான் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி என்றும், பணிகள் காரணமாக பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்வதாகவும் கூறி உள்ளார். இதையடுத்து ஹோடா, நாடாளுமன்ற தேர்தலின்போது, கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் இருப்பதாகவும், சுரேஷ்பாபுவை சந்திப்பதாகவும் தெரிவித்து, பின்னர் அவசரமாக கிளம்பி சென்றுள்ளார்.
இந்நிலையில் வாட்ஸ் ஆப் மூலமாக ரிசர்வ் வங்கி தரப்பில் 2000 கோடி ரூபாய் அறக்கட்டளைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக வங்கி அனுமதி சான்றிதழ் ஒன்றை அனுப்பி உள்ளார். இதில் இருந்து அறக்கட்டளைக்கு 50 கோடி ரூபாய் ஒதுக்கி தருவதாக ரவீந்திரபாபு தெரிவித்ததை நம்பி, சுரேஷ் பாபு, ரவீந்திரபாபுவிடம் ஒரு லட்ச ரூபாய் அளித்ததோடு மேலும் 1 லட்சம் ரூபாய் செலவும் செய்துள்ளார். இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஜெனரேட்டர் வாங்க பணம் கேட்கவே சுரேஷ்பாபுவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விசாரித்ததில் ஹோடா என்ற ஐஏஎஸ் அதிகாரி யாரும் இல்லை என தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து, பணம் மோசடி செய்யப்பட்டது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்த சுரேஷ்பாபு, தனது பணத்தை மீட்டு தரும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story