அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கை விடுத்த ராஜன் செல்லப்பா : பரபரப்பான சூழலில் கூடிய அதிமுக கூட்டம்
அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று மதுரையில் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சென்னையில் அதிமுக நடத்திய ஆலோசனை கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பை இப்போது பார்க்கலாம்...
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அதிமுகவுக்கு ஏற்பட்ட சரிவை தொடர்ந்து கட்சியில் பல்வேறு சலசலப்புகள் ஏற்பட்டது. இந்த நிலையில் தான் ஒற்றைத் தலைமை என்ற வார்த்தையை கையில் எடுத்தார் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா. மதுரை தொகுதியில் போட்டியிட்ட இவரது மகன் ராஜ் சத்யன் தோல்வியடைந்த நிலையில், ஒற்றைத் தலைமை தான் கட்சிக்கு தேவை என்றார். இவரின் இந்த பேச்சு அதிமுகவினர் மட்டுமின்றி பல்வேறு கட்சியினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி, கட்சிக்குள் எந்த வித கோஷ்டி பூசலும் இல்லை என்றார்.
அதேநேரம் இதுதொடர்பான கேள்வியை துணை முதலமைச்சரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வத்திடம் முன்வைத்தபோது, ராஜன் செல்லப்பாவின் பேட்டியை முழுமையாக பார்த்தபிறகு பதிலளிக்கிறேன் என்றபடி நகர்ந்தார்...
அமைச்சர்கள் உதயகுமாரும், ராஜேந்திர பாலாஜியும் ஒற்றைத் தலைமைக்கான அவசியம் அதிமுகவுக்கு தேவையில்லை என்றும், கட்சி கட்டுக்கோப்பாகவே இருக்கிறது என பதிலளித்தனர்.
அதேநேரம் அதிமுகவின் முடிவுகள் குறித்து தொண்டர்கள் யாரும் பொதுவெளியில் விவாதிக்க கூடாது என அதிமுக அறிக்கை மூலம் கேட்டுக் கொண்டது.
ஆனால் இதற்கெல்லாம் காரணகர்த்தாவாக இருந்த ராஜன் செல்லப்பா சில நாட்களிலேயே தன் முடிவில் இருந்து சற்று மாறினார். கட்சி கட்டுக்கோப்பாக இருக்கிறது என கூறிய அவர், தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம் என்றார்...
இந்தநிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள்
மற்றும் முக்கிய நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்க வருமாறு போஸ்டர் ஒட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. நிச்சயம் இதுதொடர்பான ஒரு முடிவு எடுக்கப்படலாம் என தொண்டர்கள் எதிர்பார்த்து நின்றனர்.
ஆனால் பல தீர்மானங்களை நிறைவேற்றிய அதிமுக கூட்டத்தில் ஒற்றைத் தலைமை பற்றி ஒருவரும் வாய்திறக்கவில்லை என்கின்றனர் மூத்த நிர்வாகிகள்..
பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் தொடங்கிய அதிமுக கூட்டம், எந்த வித பதற்றத்தையும் வெளிப்படுத்தாமல் சாதாரண ஒரு கூட்டம் போலவே நடந்து முடிந்தது...
Next Story