அனைவருக்கும் கழிப்பிட வசதி திட்டத்தை பயன்படுத்தி மோசடி : பணத்தை மீட்டு, வீடு வீடாக சென்று வழங்கிய அதிகாரிகள்
மத்திய அரசின் அனைவருக்கும் கழிப்பிட வசதி திட்டத்தை பயன்படுத்தி மோசடி செய்த பணத்தை, அதிகாரிகள் மீட்டு, வீடுவீடாக சென்று வழங்கிய சம்பவம் திருப்பூரில் அரங்கேறியுள்ளது
கடந்த 2016 ஆம் ஆண்டு, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள இச்சிப்பட்டி, தேவாரம்பாளையம் , சிங்கப்பூர் நகர் ஆகிய பகுதிகளில் மத்திய அரசின் அனைவருக்கும் கழிப்பிட வசதி திட்டத்திற்காக பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்காக, ஒப்பந்த ஊழியர் சத்யா, பயனாளிகளுக்கு மானியம் வழங்கிட ஒவ்வொருவரிடமும், 1500 முதல் 2 ஆயிரம் ரூபாய் என மொத்தம் ஒரு லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பெற்றுள்ளார். ஆனால், மானிய தொகை கிடைக்காததால், ஏமாற்றம் அடைந்த மக்கள், சத்யா மீது மாவட்ட நிர்வாகத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், தேர்வு செய்திருந்த 92 பயனாளிகளில், 36 பேர் மட்டுமே தகுதி உடையவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, சத்யா லஞ்சமாக பெற்ற பணத்தை அவரிடம் இருந்து மீட்ட அதிகாரிகள் வீடு வீடாக சென்று மக்களிடம் ஒப்படைத்தனர்.
Next Story