ஸ்டெர்லைட் வழக்கு : விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி அறிவிப்பு
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி சசிதரன் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் சத்திய நாராயணன் தலைமையிலான அமர்வு விசாரித்தது. விசாரணையின் போது, ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற வேதாந்தாவின் கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்து விட்டனர். தற்போது, நீதிபதி சத்தியநாராயணன் மதுரைக் கிளையில் உள்ளதால், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரிய இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆஷா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதும், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இருந்தபோது, சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி சசிதரன், தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை எனத் தெரிவித்தார். மேலும், வேறு அமர்வு அமைக்க தலைமை நீதிபதி க்கு பரிந்துரைத்தார். இதையடுத்து, உடனடியாக வேறு அமர்வை அமைக்க வேண்டும் என ஆலை தரப்பில் தலைமை நீதிபதி தஹில் ரமானி அமர்வில் முறையிடப்பட்டது. இதுசம்பந்தமாக பிற்பகலில் நிர்வாக உத்தரவு பிறப்பிப்பதாக தலைமை நீதிபதி பதிலளித்தார்
Next Story