திறக்கப்படுமா கர்நாடகத்தில் இருந்து தண்ணீர்..? நடைபெறுமா குறுவை சாகுபடி..?

குறுவை சாகுபடிக்காக ஏங்கி நிற்கும் விவசாயிகளின் குமுறலை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு
x
ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு, குறுவை சாகுபடிக்கு தண்ணீர் வழங்குவது வழக்கம். ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக ஜூன் 12 ல் மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. இந்த ஆண்டும், நீர் குறைவாக இருப்பதால், தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

மேட்டூர் அணை நீர்மட்டத்தை கருத்தில் கொண்ட தமிழக விவசாயிகள், கர்நாடக அரசு தண்ணீர் திறப்பது தான் தற்போதைய சூழலில் ஒரே வழி என்ற நிதர்சனத்தை உணர்ந்துள்ளனர். இதனால், காவிரி ஆணையம் உத்தரவிட்டுள்ளபடி, கர்நாடக அரசு 9 புள்ளி 19 டிஎம்சி நீரை உடனே திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர். 

கர்நாடக அரசு, தண்ணீர் இல்லை என கூறுவதை ஏற்க முடியாது என கூறும் விவசாயிகள், பாசன கால்வாய்களுக்கு தண்ணீரை திருப்பி விட்டு கர்நாடகா சேமித்து வருவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். 

முறையாக தூர்வாரப்படாத‌தால், கடந்த ஆண்டு, மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் வீணாக கடலில் கலந்த‌து. இந்த ஆண்டும், தூர் வாரப்படவில்லை, கதவணைகள் சரிவர கட்டப்படவில்லை என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டு.

தமிழக அரசு குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை செயல்படுத்திட வேண்டும் என கோரிக்கை விடுக்கும் விவசாயிகள், குறுவை சாகுபடிக்கு இல்லாவிட்டாலும் குடிப்பதற்காவது தண்ணீர் தாருங்கள் என கர்நாடக அரசிடம் வேதனையுடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர். குறுவை சாகுபடி நடக்குமா? கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் கிடைக்குமா? மேட்டூர் அணை திறக்கப்படுமா? என பல ஏக்கங்களுடன் காத்திருக்கும் தமிழக விவசாயிகளுக்கு,  தென்மேற்கு பருவ மழையாவது கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Next Story

மேலும் செய்திகள்