சர்ச்சையில் சிக்கிய திருச்சி போதை மறுவாழ்வு மையம் திடீர் மூடல்...காரணம் என்ன?
திருச்சியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த காவலர் உயிரிழந்ததை அடுத்து, அந்த மையத்தின் உரிமையாளர் தலைமறைவாகியுள்ளார்.
திருச்சி கே.கே.நகரில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்ற, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த காவலர் தமிழ்ச்செல்வன், கடந்த 1ஆம் தேதி உயிரிழந்தார். அவரது சாவில் மர்மம் உள்ளதாக உறவினர்கள் திருச்சி கே.கே.நகர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, புதைக்கப்பட்ட தமிழ்ச்செல்வன் உடல் நேற்று தோண்டி எடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கிடையே, சென்னை மனநல காப்பக இயக்குனர் உத்தரவின் படி, திருச்சி மருத்துவக் கல்லூரி மனநலத்துறை தலைவர் நிரஞ்சனா தேவி, மருத்துவர் முரளி ஆகியோர் மையத்தில் நேரடி ஆய்வு செய்தனர்.
இதைத்தொடர்ந்து சமூக நல பாதுகாப்பு துறையினரும் ஆய்வு செய்தனர். அப்போது, இந்த மையம் உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்ததும், பதிவு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் மையத்தில் இல்லாததும் தெரியவந்தது. இந்நிலையில் மையத்தில் சிகிச்சை பெற்று வந்த, 26 பேரும் தானாக வெளியேறிய நிலையில், அங்கிருந்த ஊழியர் பிரகாஷ் என்பவர் இன்று காலை மையத்தை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். மேலும் இந்த மையத்தின் உரிமையாளர், ஜெயங்கொண்டத்தை சேர்ந்த மணிவண்ணன் தலைமறைவாகியுள்ளார்.
Next Story