கருணாநிதியின் 96-வது பிறந்த நாள் : கருணாநிதி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 96-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
கருணாநிதியின் 96-வது பிறந்த நாள் : கருணாநிதி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை
x
கருணாநிதியின், பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் ஜூன் 3ஆம் தேதி கட்சியினரால் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, சென்னை அண்ணா அறிவாலயம் உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கருணாநிதி பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அந்த சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். அதைத் தொடர்ந்து, துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்ட தி.மு.க.வின் முன்னணி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செய்தனர். காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் கே.வி. தங்கபாலு, கவிஞர் வைரமுத்து, கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் ஆகியோரும் கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தனர். 

கருணாநிதியின் நினைவிடத்தில் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை
கருணாநிதியின் 96 வது பிறந்த நாளையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.  கட்சியின் சின்னமான உதய சூரியன் வடிவில், மலர்களால், அலங்கரிக்கப்பட்ட கருணாநிதியின் நினைவிடதிற்கு  சென்ற திமுக தலைவர் ஸ்டாலின், மரியாதை செய்தார். அவரைத் தொடர்ந்து, பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, வி.பி. துரைசாமி, பொன்முடி,  எ.வ. வேலு, ஆ. ராசா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செய்தனர். இதைத் தொடர்ந்து, மெரினாவில், அன்னதான நிகழ்ச்சியை ஸ்டாலின்  துவங்கி வைத்தார். 

"கருணாநிதி காட்டிய அன்பு அளப்பரியது" - திருச்சி சிவா
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 96ஆவது பிறந்தநாள் இன்று. கருணாநிதி பிறந்த நாளில் மகிழ்ச்சி ஒருபுறம் என்றாலும், அவர் இல்லாதது ஏக்கத்தை தருவதாகவும், கண்ணீரைத் துடைத்து கடமை ஆற்றுவோம்  என்றும், திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

"கருணாநிதி இல்லாத பிறந்த நாள் உருக வைக்கிறது" - கவிஞர் வைரமுத்து
தனக்கு நண்பராய், ஆசிரியராய், ஆசானாய் இருந்த கருணாநிதி இல்லாத பிறந்த நாள் உருக வைப்பதாகவும், அவரோடு அளவளாவிய நாட்கள் கனவாகிப் போனதாகவும்,  கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.


"கருணாநிதி இல்லாத பிறந்த நாளை மனவேதனையுடன் பார்க்கிறேன்" - ஆற்காடு வீராசாமி, திமுக
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 96ஆவது பிறந்தநாள் இன்று. கருணாநிதி இல்லாத பிறந்தநாளை மனவேதனையுடன் பார்ப்பதாகவும், தன்னை தம்பி என்று அவர் அழைத்த நாட்களை எல்லாம் நினைவு கூர்வதாகவும், அவருடன் அதிக நெருக்கம் காட்டியவர்களில் முக்கியமானவரான ஆற்காடு வீராசாமி தெரிவித்தார்.

கருணாநிதியுடன் உதவியாளராக பயணித்த நாட்கள் எல்லாம் மறக்க முடியாதவை - சண்முகநாதன்
கருணாநிதியுடன் உதவியாளராக பயணித்த நாட்கள் எல்லாம் மறக்க  முடியாதவை என, அவரது உதவியாளர் சண்முகநாதன் தெரிவித்தார்.

"திமுக எனது தாய் வீடு" - குஷ்பு
அரசியலில் கருணாநிதி போன்ற தலைவரைப் பார்க்க முடியாது என்றும்,  தமிழகம் இருக்கும் வரை கருணாநிதி நிச்சயம் இருப்பார் என்றும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்தார்.

"கருணாநிதி என்பது நீண்ட நெடிய திராவிட தத்துவம்" - கி.வீரமணி
கருணாநிதி என்பது நீண்ட நெடிய திராவிட தத்துவம் என்றும், லட்சிய பயணத்தின் தொடர்ச்சி என்றும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்