கோட்சே வாழ்வும் வழக்கும்...

கோட்சே வாழ்வும் வழக்கும் கடந்து வந்த பாதையை விளக்குகிறது இந்த தொகுப்பு...
x
மகாராஷ்டரா மாநிலம் புனே மாவட்டத்தில், பாரமதி என்கிற ஊரில் பிறந்தவர் கோட்சே.  தந்தை விநாயக் வாமன்ராவ் கோட்சே,  தபால் துறை ஊழியராக பணியாற்றினார். தாயார் பெயர் லக்ஷ்மி   கோட்சேவுக்கு முதலில் ராமச்சந்திரன் என்று பெயர் சூட்டப்பட்டு  பின்னர் நாதுராம் என்று மாற்றப்பட்டது. அதற்கு காரணம், அவருக்கு முன்னர் , மூன்று ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் பிறந்து இறந்துவிட்டனர். அதனால் ஆண் குழந்தை பிறந்தால், அவை இறந்துவிடும் என்கிற சாபம் இருப்பதாக பெற்றோர்  பயந்தனர்.  அதனால் ராமச்சந்திரனை பெண் குழந்தை போலவே சில ஆண்டுகள் வரை, மூக்குத்தி அணிவித்து வளர்த்தனர். இதனால் அவருக்கு நாதுராம் என்ற பட்டப்பெயர் உருவானது. அதற்கு, மூக்கில், வளையம் அணிந்த ராம் என்று அர்த்தம் என்பதால் அந்த பெயர் விளங்கியது.  அவருக்கு ஒரு தம்பி பிறந்த பின்னர், நாதுராம் ஆண் பிள்ளை போல் வளர்க்கப்பட்டார். 

உயர்நிலை பள்ளி படிப்பை பாதியில்  நிறுத்தி விட்டு, ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்ததுடன், பின்னர் இந்து மகாசபையின்  முழு நேர ஊழியரானார். இந்து மகாசபைக்காக அக்ரானி என்ற மராத்திய பத்திரிகையை நடத்தினார். அந்த பத்திரிகை  பின்னர் இந்து ராஷ்ட்ரா என்று பெயர் மாற்றம் கண்டது.
பாகிஸ்தான்  பிரிவினைக்கு  சம்மதம் தெரிவித்தார் என  காந்தி மீது  கோபமாக இருந்த அவர் , காந்தியை  கொலை செய்ய  திட்டமிட்டார்.  அதற்காக இத்தாலி தயாரிப்பான பெரேட்டா துப்பாக்கியை சிந்தியாக்களின் ஆளுகைக்குட்பட்ட குவாலியரில், ஜகதீஸ் கோயல் என்ற ஆயுத வியாபாரியிடம் இருந்து  500 ரூபாய்க்கு கோட்சே வாங்கினார். அந்த துப்பாக்கிக்கு லைசென்ஸ் தேவையில்லை.1934 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அந்த துப்பாக்கி 9 மி.மீ, அரை-தானியங்கி  ரகத்தை சேர்ந்தது. இரண்டாம் உலகப் போரில்,  முசோலினியின் ராணுவத்தை சேர்ந்த ஒரு பிரிவினரிடம் இருந்து, குவாலியர் காலாட்படை முன்னாள் கமாண்டர் ஜெனரல் ஜோசி கைபற்றினார். பின்னர் அவரது குடும்பத்திடம் இருந்து ஆயுத வியாபாரி கோயல் கைகளுக்கு வந்தது. கோயலிடமிருந்து கோட்சே கைகளுக்கு வந்தது. 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி கோட்சே காந்தியை சுட்டுக்  கொன்றார்.  அந்த வழக்கு, சிம்லாவில் இருந்த பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் நடந்தது. 1949 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி, கோட்சேவுக்கு  மரண தண்டனை விதிக்கப்பட்டது. மரண தண்டனையை ரத்து செய்ய கோரி, காந்தியின் மகன்களான மணிலால் காந்தி மற்றும் ராமதாஸ் காந்தி ஆகியோர் கோரிக்கை வைத்தனர். ஆனால் கோரிக்கையை அன்றைய பிரதமர் நேரு, உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேல், கவர்னர்-ஜெனரல் ராஜகோபாலாச்சாரியார் ஆகியோர் நிராகரித்தனர். 1949, ஆம் ஆண்டு  நவம்பர் 15ஆம் தேதி, அம்பாலா சிறைச்சாலையில் கோட்சே தூக்கிலிடப்பட்டார். 


Next Story

மேலும் செய்திகள்