"தகுதி தேர்வில் தேர்ச்சிப் பெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய தடை"

தகுதி தேர்வில் தேர்ச்சிப் பெறாத ஆசிரியர்கள் மீது பணி நீக்க நடவடிக்கை எடுக்க தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிப் பெறாமல், ஆசிரியர்களாக பணியாற்றி வருபவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி, தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த ஏப்ரல் 30-ந்தேதி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

அதனை எதிர்த்து, திருவண்ணாமலையை சேர்ந்த இந்திராகாந்தி உள்பட 4 ஆசிரியைகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். 

இதில் மற்ற மாநிலங்களில் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக தெளிவான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது, ஆனால் அதுபோன்ற அரசாணை தமிழகத்தில் பிறப்பிக்கப்படவில்லை என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசு சார்பில் தேசிய அளவில் நடைபெறும் தகுதி தேர்வுகளில் தமிழக ஆசிரியர்களால் கலந்து கொள்ளமுடியாது என்றும் மனுவில் அவர்கள் தெரிவித்திருந்தனர். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, தேர்ச்சிபெறாத ஆசிரியர்கள் வருகிற ஜூன் மாதம் நடைபெறக்கூடிய தகுதித் தேர்வில் பங்கேற்க வேண்டும் என்றும், அவர்கள் மீது பணி நீக்க நடவடிக்கை எடுக்க கூடாது என்றும் உத்தரவிட்டனர். மேலும் வழக்கை ஜூன் 2வது வாரத்திற்கு ஒத்தி வைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்