வங்கியில் தங்க நகைகள் மாயமான விவகாரம் - குற்றவாளிகளை நெருங்க முடியாமல் போலீசார் திணறல்
புதுக்கோட்டை பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கில், உண்மை குற்றவாளிகளை நெருங்க முடியாமல் போலீசார் திணறி வருவதாக கூறப்படுகிறது.
புதுக்கோட்டை பஞ்சாப் நேஷனல் வங்கியில் அலுவலக உதவியாளராக இருந்த மாரிமுத்து, ஏப்ரல் 26 -ஆம் தேதி காணாமல் போன நிலையில், மணமேல்குடி கடற்கரைப் பகுதியில் 29-ஆம் தேதி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பிரேத பரிசோதனையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இதனிடையே, வங்கியில் இருந்த 13 புள்ளி 75 கிலோ தங்க நகைகளுடன் மாயமாகியுள்ளார் என்று வங்கி மேலாளர் மாரீஸ் கண்ணன் அளித்த புகாரின் பேரில், புதுக்கோட்டை போலீசார் மாரிமுத்து மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மாரிமுத்து கொலைக்கும் வங்கி ஊழியர்ளுக்கும் தொடர்பு இருக்கலாம் என கூறும் அவரது உறவினர்கள், இதுகுறித்து வங்கி ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை காவல் துணைக்கண்காணிப்பாளர் ஆறுமுகசாமி தலைமையிலான குழுவினர் இந்த கொலை, கொள்ளை தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நிலையில், உண்மையான குற்றவாளிகளை நெருங்க முடியாமல் திணறி வருவதாக கூறப்படுகிறது.
Next Story