ஹைட்ரோ கார்பன் அனுமதி - மத்திய அரசுக்கு திமுக, பாமக மற்றும் அமமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை தோண்ட மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதற்கு திமுக, பாமக மற்றும் அமமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன...
x
* தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல்துறை  அமைச்சகம் அனுமதி வழங்கியிருப்பதற்கு திமுக சார்பில்  கண்டனத்தைத் தெரிவித்து கொள்வதாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  

* வேளாண்மைக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தை உருவாக்கும் இந்த  திட்டங்களை எதிர்க்க  தமிழக அரசுக்கு துணிச்சல் இல்லை எனவும் விவசாயிகளை அரசு திட்டமிட்டு வஞ்சித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

* தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள போது  இது போன்ற திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுப்பது, தேர்தல் விதிமுறை மீறல் என தெரிவித்துள்ளார்.  

* பிடிவாதமாக இருந்தால், இந்திய தேர்தல் ஆணையமே நேரடியாக தலையிட்டு  அனுமதியை நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். 

 
* தமிழகத்தின் எந்த பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஹைட்ரோ கார்பன் வளம் குறித்து 32 இடங்களில் ஆய்வு நடத்த வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், தமிழகத்தின் வேளாண் மண்டலங்கள்  பாலைவனங்களாக மாறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு என்றும்  தெரிவித்துள்ளார். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகவும் அறிவிக்க வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

* இந்த திட்டத்திற்கு  அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் தினகரனும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களின் எதிர்ப்பை மீறி தமிழகத்தை பாலைவனமாக்கும் திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரமாக இருப்பதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  இந்த திட்டத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என புதுச்சேரி அரசு போல தமிழக அரசும் அறிவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்