ஊடு பயிராக சோளம், வெள்ளரி - கோடையில் விவசாயிகளுக்கு வருமானம்...

தண்ணீர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், கோடை காலத்தில் ஊடுபயிராக, சோளம் மற்றும் வெள்ளரிக்காயை பயிரிட்டு விவசாயிகள் வருமானம் ஈட்டி வருகின்றனர்.
x
நாகை மாவட்டம், ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி குணசேகரன் தனது நிலத்தில், பருத்தி சாகுபடி செய்துள்ளார். குறைவான தண்ணீரில், ஊடுபயிராக, சோளத்தை அவர் பயிரிட்டுள்ளார். கஜா புயலால் நஷ்டத்தை சந்தித்த தனக்கு, இந்த ஊடுபயிர் முறை, வருமானம் ஈட்டித் தருவதாக கூறியுள்ளார், விவசாயி குணசேகரன். இதே போல்,  திருக்குவளை அடுத்த வலிவலம் கிராமத்தை சேர்ந்த சுந்தரம், பார்வதி தம்பதியினர், வெடித்து வறண்ட களிமண் நிலத்தில், வெள்ளரி சாகுபடி செய்துள்ளனர். வெள்ளரி சாகுபடிக்கு குறைந்த அளவே தண்ணீர் தேவை என்றாலும், அதற்காக பல மீட்டர் தூரம் நடந்து செல்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். தங்களுக்கு, அரசு மின் மோட்டார் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வறட்சி, இயற்கை சீற்றம் போன்ற இடர்பாடுகளில் சிக்கி தவிக்கும், விவசாயிகளுக்கு, ஊடு பயிர் மூலம் வருமானம் கிடைப்பது வரப்பிரசாதமாக உள்ளது. குறைந்த அளவே தண்ணீர் தேவைப்படுவதால்,  ஊடுபயிர் முறைக்கு விவசாயிகள் தற்போது அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்